கோட்டயம் இரட்டை கொலை: அசாம் இளைஞர் கைது

கோட்டயம்: கேரளாவில் வீட்டில் தனியாக இருந்த தொழிலதிபர் மற்றும் அவரின் மனைவி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில், 24 மணி நேரத்தில் கொலையாளியை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள திருவாதுக்கல் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் விஜயகுமார், 64 மற்றும் அவரது மனைவி மீரா, 60. இவர்களுக்கு கோட்டயத்தில் திருமண மண்டபம் உள்ளிட்ட சில தொழில்கள் உள்ளன. இவர்களின் மகன் கடந்த 2017ல் மர்மமான முறையில் இறந்தார். மகளுக்கு சமீபத்தில் திருமணம் முடிந்தது. அவர் அமெரிக்காவில் உள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை தம்பதி இருவரும் தங்கள் வீட்டில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். காலை வீட்டுக்கு வந்த பணியாளர் இருவரின் உடல்களையும் கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். விஜயகுமார் ஒரு அறையிலும், மீரா மற்றொரு அறையிலும் இறந்து கிடந்தனர்.

கோட்டயம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆரம்ப கட்ட விசாரணையில், கொலையாளி முன் கதவை உடைக்க முயற்சித்து, முடியாமல் போகவே ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்தது தெரிந்தது. வீட்டின் வெளியே இருந்த கோடரியைப் பயன்படுத்தி கொலை செய்துள்ளார்.

வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் கொலையாளி அங்கிருந்து எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார். விஜயகுமார் மற்றும் அவர் மனைவியின் மொபைல் போன்கள் காணாமல் போயிருந்தன.

அவற்றை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், அந்த மொபைலில் ஒன்று நேற்று ஆன் செய்யப்பட்டது. அதை வைத்து கொலையாளி திருச்சூர் மாவட்டம் மலா பகுதியில் பதுங்கியிருப்பது தெரிந்தது.

அங்கு சென்று அமித் உராங் என்ற அசாம் இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த விஜயகுமாரின் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Advertisement