முழுமையான அரசியல்வாதி!

'இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கு இப்போதே தயாராகி விட்டார் போலிருக்கிறது...' என, உத்தர பிரதேச முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான யோகி ஆதித்யநாத் பற்றி கூறுகின்றனர், இங்குள்ள அரசியல்வாதிகள்.

அரசியல் பிரபலங்களின் வாழ்க்கையை, திரைப்படமாக எடுக்கும் போக்கு தற்போது அதிகரித்துள்ளது. முன்னாள் பிரதமரும், காங்., மூத்த தலைவருமான, மறைந்த இந்திரா உள்ளிட்ட பலரது வாழ்க்கை வரலாறுகள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன.

இந்த வரிசையில், தற்போது உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் இணைந்துள்ளார். இவரது வாழ்க்கையை மையமாக வைத்து, ஹிந்தியில் ஒரு படத்தை தயாரிப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளன. பிரபல ஹிந்தி நடிகர் ஆனந்த் ஜோஷி தான், யோகி ஆதித்யநாத் பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

யோகியின் இளமைக்கால வாழ்க்கை துவங்கி, கோரக்பூர் மடத்தில் துறவியாக இருந்தது, அரசியலுக்கு வந்தது, முதல்வரானது வரையிலான அனைத்து நிகழ்வுகளும் இந்த படத்தில் இடம் பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உ.பி.,யில், 2027ல் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கு சில மாதங்களுக்கு முன் இந்த படத்தை திரையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதைக் கேள்விப்பட்ட உ.பி., மக்கள், 'துறவியாக இருந்த யோகி ஆதித்யநாத், இப்போது தான் முழுமையான அரசியல்வாதியாக மாறியுள்ளார்...' என்கின்றனர்.

Advertisement