ஏப்ரல் 24 ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா தினம்; பிரகடனம் செய்தது நியூயார்க் நகரம்!

நியூயார்க்:பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் உலகளாவிய சேவை, சமுதாய நலப்பணிகள், கருணை, அமைதிப் பணிகளை கவுரவிக்கும் வகையில், நியூயார்க் நகரம் சிறப்பு பிரகடனம் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் எரிக் ஆதம்ஸ், ஏப்ரல் 24ம் தேதியை ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு கொண்டாட்ட தினமாக பிரகடனம் செய்தார்.
பிரகடன அறிவிப்பை, மேயர் அலுவலக பிரதிநிதிகள் முன்னிலையில் துணை கமிஷனர் திலீப் சவுகான் வெளியிட்டார்.
இதன் மூலம் உலக அளவில், இத்தகைய அறிவிப்பை வெளியிட்ட முதல் அரசு கவுன்சில் நிர்வாகம் என்ற பெருமையை நியூயார்க் நகரம் பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சத்ய சாய் குளோபல் கவுன்சில் உறுப்பினர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பிரசாந்தி நிலையம், ஸ்ரீ சத்ய சாய் மீடியா சென்டர் மூலம் தயாரிக்கப்பட்ட பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது.
ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.ஜே. ரத்னாகர், அறிக்கை வாசித்தார்.
மனிதாபிமான அடிப்படையில் உலகம் முழுவதும் ஸ்ரீ சத்ய சாய் பக்தர்கள் மேற்கொண்ட நற்பணிகள் குறித்து இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டிருந்தது.