உணவு, குதிரை சவாரி தாமதத்தால் பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பிய 39 பேர்

ஸ்ரீநகர்: உணவு மற்றும் குதிரை சவாரி தாமதத்தால் காஷ்மீரின் பஹல்காம் செல்வதும் தாமதமாகியது. இதனால், 39 பேர் பயங்கரவாதிகள் தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்புமின்றி தப்பியது தெரியவந்துள்ளது.
காஷ்மீரின் பஹல்காமின் பைசரன் பகுதியில் நேற்று முன்தினம்( ஏப்.,22) அன்று நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உணவு தாமதம்
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த 11 பேர் கொண்ட குடும்ப உறுப்பினர்கள் காஷ்மீருக்கு கடந்த 19ம் தேதி சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் அடுத்த 2 நாட்கள் குல்மார்க் மற்றும் சோன்மார்க் பகுதிகளை சுற்றிப் பார்த்தனர். செவ்வாய் அன்று மதியம் பஹல்காம் பகுதியை பார்க்க திட்டமிட்டு இருந்தனர். முதல் இரண்டு நாட்கள் சரியாக சாப்பிடாத காரணத்தினால், பஹல்காமின் பைசரன் பகுதியை நெருங்கும் முன்னர் இருந்த உணவகம் ஒன்றில் சாப்பிட சென்றனர். அங்கு இருந்த இறைச்சி அவர்களுக்கு பிடிக்கவில்லை. இதனையடுத்து வேறு இறைச்சியை சமைத்து எடுத்து வருவதாக ஊழியர் கூறியுள்ளார். இதனால், அவர்கள் அங்கேயே அமர்ந்து இருந்தனர். சாப்பிட்டுவிட்டு தாமதமாக பைசரன் நோக்கி சென்றனர்.
அந்த இடத்தை நெருங்கும் போது, அங்கிருந்து குதிரைகள் அவசர அவசரமாக திரும்பி சென்றன. வாகனங்களும் திரும்பின மக்கள் அலறியடித்தபடி சென்றுள்ளனர். ஆனால், அவர்களை அழைத்து வந்த கார் டிரைவர், ஒன்றும் இல்லை. பயணத்தை தொடரலாம் எனக்கூறியுள்ளார். ஆனால், ஏதோ பிரச்னை உள்ளதை அறிந்து அங்கு செல்வதை தவிர்த்து விட்டு ஏரி பகுதிக்கு சென்றுள்ளனர். மாலை 4:30 மணியளவில் அங்கிருந்த கடைக்காரர்கள் அவர்களை விரைந்து செல்லும்படி கூறியுள்ளனர். அறைக்கு சென்ற பிறகு தான், பயங்கரவாத தாக்குதல் நடந்தது தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் தாக்குதலில் இருந்து தப்பி உள்ளனர்.
குதிரை சவாரி தாமதம்
அதேபோல், மஹாராஷ்டிராவின் கோல்ஹாப்பூர், சங்லி, ரத்னகிரி மற்றும் புனே நகரங்களை சேர்ந்த 28 பேர் காஷ்மீர் சென்றுள்ளனர். அவர்கள் பஹல்காம் பகுதிக்கு செல்ல தயாராகினர். ஆனால், அவர்களை அழைத்து செல்லும் குதிரைகள் கிடைக்க தாமதமானது.
இது தொடர்பாக சுற்றுலா பயணி ஒருவர் கூறியதாவது: பஹல்காமின் பைசரன் பகுதிக்கு குதிரையில் அழைத்து செல்ல ஒருவருக்கு ரூ.3,200 கேட்டனர். அவற்றை குறைக்கும்படி பேரம் பேசினோம். பைசரன் பகுதியை நெருங்க 500 மீட்டர் தொலைவு இருந்த நிலையில், அந்த வழியாக வந்த டாக்சி டிரைவர் ஒருவர், அங்கே போக வேண்டாம். துப்பாக்கிச்சூடு நடக்கிறது என கத்தியபடி சென்றார். இதனால், அனைவரும் அந்த இடத்திற்கு செல்வதை தவிர்த்துவிட்டோம் என்றார்.
புதுமண தம்பதிகளை காப்பாற்றிய சிற்றுண்டி
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரை சேர்ந்த மிஹிர் மற்றும் கோமல் சோனிக்கு சில நாட்களுக்கு முன்னர் தான் திருமணமாகி இருந்தது. இவர்கள் தேனிலவுக்காக பஹல்காம் வந்தனர். பைசரனில் துப்பாக்கிச்சூடு நடந்த பகுதிக்கு வந்த இவர்கள், பேல்புரி சாப்பிட கடை ஒன்றுக்கு சென்றனர். அங்கு சிற்றுண்டி கிடைக்க தாமதம் ஆனதால், அவர்கள் ஓரமாக ஒரு இருக்கையில் அமர்ந்து இருந்தனர். அப்போது, துப்பாக்கிச்சூடு சத்தமும், மக்கள் அலறியடித்து ஓடியதும் பார்த்தனர். சிற்றுண்டி தாமதமானதால் தாங்கள் உயிர் தப்பியதாக தெரிவித்தனர். இந்த தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரி வினய் நர்வால் மற்றும் அவரது மனைவி ஆகியோர் சற்று முன்னர் தான், தாங்கள் இருந்த கடைக்கு வந்து பேல்பூரி வாங்கி சாப்பிட்டுவிட்டு சென்றதாகவும் கூறினார்.
மேலும்
-
மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு: ராகுல்
-
பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம்: மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் தொலைபேசியில் பேச்சு
-
பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை: முகேஷ் அம்பானி அறிவிப்பு
-
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: மத்திய அரசு மீது குற்றம் சாட்டிய அசாம் எம்.எல்.ஏ., கைது
-
ஷிம்லா ஒப்பந்தம் சொல்வது என்ன?
-
பாக்., நடிகர் நடித்த பாலிவுட் படத்திற்கு தடை: மத்திய அரசு முடிவு