பிரவீன் சித்ரவேல் 'தங்கம்': உலக தடகள போட்டிக்கு தகுதி

கொச்சி: பெடரேஷன் கோப்பை 'டிரிபிள் ஜம்ப்' போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தின் பிரவீன் சித்ரவேல், உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

கேரள மாநிலம் கொச்சியில், 28வது தேசிய பெடரேஷன் கோப்பை சீனியர் தடகள போட்டி நடந்தது. ஆண்களுக்கான 'டிரிபிள் ஜம்ப்' போட்டியில் ஜே.எஸ்.டபிள்யு., அணிக்காக விளையாடிய தமிழகத்தின் பிரவீன் சித்ரவேல் 23, அதிகபட்சமாக 17.37 மீ., தாண்டி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். வரும் செப்டம்பரில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இதற்கான தகுதி இலக்காக 17.22 மீ., நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தவிர இவர், தனது சொந்த தேசிய சாதனையை சமன் செய்தார். கடந்த 2023ல் கியூபாவில் நடந்த போட்டியில் இவர், 17.37 மீ., தாண்டிய பிரவீன், தேசிய சாதனை படைத்திருந்தார்.
விமானப்படை அணியின் அப்துல்லா அபூபக்கர் (16.99 மீ.,), ஜே.எஸ்.டபிள்யு., அணியின் முகமது முஹாசின் (16.28 மீ.,) முறையே வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.


கோபிகா 'வெள்ளி': பெண்களுக்கான உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் கோபிகா (1.82 மீ.,) வெள்ளிப் பதக்கம் வென்றார். ஹரியானாவின் பூஜா (1.84 மீ.,), கர்நாடகாவின் அபினயா (1.80 மீ.,) முறையே தங்கம், வெண்கலம் கைப்பற்றினர்.

அன்னு 'தங்கம்': பெண்களுக்கான ஈட்டி எறிதலில் உ.பி.,யின் அன்னு ராணி (56.66 மீ.,) தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். கர்நாடகாவின் கரிஷ்மா (52.73 மீ.,), ரம்யாஸ்ரீ (51.17 மீ.,) முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனர்.

ஏஞ்சல் 'வெள்ளி': பெண்களுக்கான 200 மீ., ஓட்டத்தின் பைனலில் இலக்கை 23.91 வினாடியில் கடந்த தமிழகத்தின் ஏஞ்சல் சில்வியா வெள்ளி வென்றார். தெலுங்கானாவின் நித்யா (23.68 வினாடி) தங்கத்தை கைப்பற்றினார்.
ஆண்களுக்கான 200 மீ., ஓட்டத்தின் பைனலில் பந்தய துாரத்தை 20.85 வினாடியில் அடைந்த தமிழகத்தின் ராகுல் குமார், வெண்கலம் வென்றார். ஒடிசா வீரர் அனிமேஷ் குஜுர் (20.40 வினாடி) தேசிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

Advertisement