பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு காங்கிரஸ் செயற்குழு கண்டனம்

3

புதுடில்லி : ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பஹல்காமில், பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய பயங்கரவாதிகள் நால்வர் நடத்திய பயங்கர தாக்குதலில், 25 சுற்றுலா பயணியர் உட்பட 26 பேர் இறந்தனர்.


அந்த தாக்குதலை கண்டிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியின் உயரிய அமைப்பான செயற்குழு கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை, கட்சியின் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் மற்றும் பவன் கெரா ஆகியோர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:


பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு காங்கிரஸ் இரங்கல் தெரிவிக்கிறது. பாகிஸ்தானால் நடத்தப்பட்ட கோழைத்தனமான அந்த தாக்குதல், நம் ஜனநாயகத்தின் மீது நேரடியாக நடத்தப்பட்ட தாக்குதல்.


ஹிந்துக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருப்பது நன்றாக தெரிகிறது. எனினும், இந்த நேரத்தில் அனைவரும் அமைதி காக்க வேண்டும்.


பொறுப்பான எதிர்க்கட்சியான காங்கிரஸ், பாதுகாப்புத்துறை மற்றும் உளவுத்துறைகளின் தோல்வியை சுட்டிக்காட்ட தவறவில்லை. இதற்கான பதிலை, மத்திய அரசிடம் இருந்து எதிர்பார்க்கிறது.


விரைவில், ஜம்மு - காஷ்மீரில் நடக்கவிருக்கும் அமர்நாத் யாத்திரையை, பாதுகாப்பு குறைபாடு இன்றி கவனமாக நடத்த வேண்டும். லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் இந்த யாத்திரையை பாதுகாப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என, மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம்.


பஹல்காம் தாக்குதலை கண்டிக்கும் விதமாக, நாடு முழுதும் இன்று, மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement