அங்கன்வாடி எல்.கே.ஜி., --- யு.கே.ஜி.,யில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் செங்கோட்டையன் குற்றச்சாட்டு
சென்னை:''அங்கன்வாடி மையங்களில் செயல்படும், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளில், இரண்டு அல்லது மூன்று மாணவர்கள் தான் படிக்கின்றனர்,'' என, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., செங்கோட்டையன் குற்றம் சாட்டினார்.
சட்டசபையில் அவர் பேசியதாவது:
கடந்த, 2001ல் தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 66.49 லட்சம்; தற்போது, 58.17 லட்சமாக குறைந்துள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த, 2019 - -20ம் ஆண்டில், அங்கன்வாடி மையங்களில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளை துவக்கினோம். முதல் ஆண்டில், 42,599 மாணவர்கள், இரண்டாம் ஆண்டில் ஒரு லட்சம் மாணவர்கள் படித்தனர்.
ஆனால், இப்போது எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளில் இரண்டு அல்லது மூன்று மாணவர்கள் தான் படிக்கின்றனர்.
அ.தி.மு.க., ஆட்சியில், மலைப்பகுதிகள், பஸ் வசதி இல்லாத இடங்களில், பள்ளிகளை துவக்கினோம். கடந்த நான்காண்டுகளில், 30 பள்ளிகள் தான் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
அந்தந்த பள்ளிகளிலேயே, 10, பிளஸ் ௨ வகுப்பு பொதுத்தேர்வுகள் எழுத, தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும். அப்போது தான் மன உளைச்சல் இல்லாமல் மாணவர்கள் தேர்வு எழுத முடியும்.
முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், 2017 முதல் 2021 வரை, 904 தேர்வு மையங்களை புதிதாக உருவாக்கினோம். ஆனால், நான்காண்டு தி.மு.க., ஆட்சியில், 322 மையங்கள் தான் உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு பள்ளிகளில், 20,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில், தற்காலிக ஆசிரியர்கள் தான் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தால், அரசுப் பள்ளிகள் சிறப்பாக செயல்பட முடியாது. வரும், 2026ல் அ.தி.மு.க., ஆட்சி அமைவது உறுதி. அப்போது, ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும்.
இவ்வாறு செங்கோட்டையன் பேசினார்.