காட்டுப்பன்றிகள் நடமாட்டம்; கண்காணிப்புக்குழு அமைப்பு

திருப்பூர்; விளை நிலங்களில் புகுந்து, பயிர்களை துவம்சம் செய்யும் காட்டுப்பன்றிகளை சுடும் தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து, காட்டுப்பன்றி நடமாட்டம் அதிகமுள்ள கிராமங்களில் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

'விளை நிலங்களில் புகும் காட்டுப்பன்றிகள், பயிர்களை துவம்சம் செய்து விடுகின்றன,' என்பது, விவசாயிகளின் தொடர் குற்றச்சாட்டு. அதன் தொடர்ச்சியாக, பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை சுட, தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. விவசாய நிலங்களில் மக்காச்சோளம், கரும்பு, குச்சிக்கிழங்கு, சோளத்தட்டு உள்ளிட்டவற்றை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதால், கால்நடைகளுக்கான தீவனப்பற்றாக்குறை ஏற்படும் சூழலும் நிலவியது. திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, தாராபுரம் பகுதிகளில் தான் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகளவில் இருக்கிறது. காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை விரைவில் துவக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

காட்டுப்பன்றிகளை சுடுவது தொடர்பாக, மாநில வன பணிக்கான மத்திய உயர் பயிற்சியகத்தில், வன அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டிருக்கிறது.

பயிர் இழப்பு புகார் இல்லை

காட்டுப்பன்றிகளை சுடும் அரசின் உத்தரவு தொடர்பாக, கிராம அளவில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்தந்த கிராம ஊராட்சி செயலர்கள், வி.ஏ.ஓ., மற்றும் பாரஸ்டர் அடங்கிய இக்கமிட்டியினர், தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் எங்கெங்கு காட்டுப்பன்றிகள் நடமாட்டம் உள்ளது என்பதை, அப்பகுதி மக்கள் வாயிலாக அறிந்து, வனத்துறை கவனத்துக்கு கொண்டு வருவர். அதனடிப்படையில், அரசின் வழிகாட்டுதல் படி நடவடிக்கை எடுக்கப்படும். கடந்தாண்டு வரை, காட்டுப்பன்றியால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு, அரசின் சார்பில் வழங்கப்பட்டுவிட்டது. இந்தாண்டு, பயிர் இழப்பு குறித்த புகார் எதுவும் இதுவரை வரவில்லை.- வனத்துறையினர்.

Advertisement