பயங்கரவாதிகளுக்கு பதிலடி செல்வகணபதி எம்.பி., தகவல்

புதுச்சேரி: ஜம்மு - காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கிடைக்கும் என, பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

ஜம்மு - காஷ்மீர், பஹல்காம் பகுதிக்கு சுற்றுலா சென்றவர்கள் மீது பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 28 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு புதுச்சேரி பா.ஜ., சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

நீ இந்துவா என, கேள்வி கேட்டு கொலை செய்தவர்களின் கொடுமையை உலக நாடுகள் கண்டித்து வருகின்றன. பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணத்தை பாதியில் முடித்து டில்லி வந்து, விமான நிலையத்திலேயே தாக்குதல் விவரங்களைக் கேட்டு பதிலடிக்குத் தயாராகிவிட்டார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினம் இரவே ஜம்மு காஷ்மீர் சென்று அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தார். அதன் விளைவாக நேற்று காலை 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மீண்டும் தலையெடுத்திருக்கும் பயங்கரவாதத்தை வேரோடும் பிடுங்கி எறிவோம் என்ற சபதத்துடன், பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும், ராணுவத்தினரும் இனி அதிரடி ஆட்டம் ஆடுவர். தவறு இழைத்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவர்.

இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

Advertisement