குப்பை பிரச்னை தீர்க்காவிட்டால் சட்டசபையில் உண்ணாவிரதம் ஏனாம் எம்.எல்.ஏ., அறிவிப்பு

புதுச்சேரி: ஏனாம் குப்பை பிரச்னை தீர்க்காவிட்டால் சட்டசபையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன் என, ஏனாம் எம்.எல்.ஏ., கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் அறிவித்துள்ளார்.

ஆந்திரா மாநிலத்தையொட்டி அமைந்துள்ள ஏனாமில் குப்பை பிரச்னை பூதாகரமாக வெடித்துள்ளது. ஏனாம் வீதிகள் முழுதும் குப்பை வராப்படாமல் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

கடந்த 60 நாட்களாக குப்பைகளை கொட்ட இடம் இல்லாமல் ஏனாம் நகராட்சி திணறி வருகிறது. இந்த பிரச்னையில் மக்களுடன் போராட்டம் நடத்திய ஏனாம் எம்.எல்.ஏ., கொல்லபள்ளி சீனிவாச அசோக், சுயேச்சை எம்.எல்.ஏ., சிவசங்கருடன் நேற்று காலை 11:00 மணியளவில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேச புதுச்சேரி சட்டசபைக்கு வந்தார்.

குப்பை பிரச்னையில் ஆளும் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அளித்து வரும் ஆதரவினை வாபஸ் பெற தயாராக உள்ளதாக அவர் ஏற்கனவே அறிவித்து இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

30 நிமிடம் காத்திருப்பிற்கு பிறகு முதல்வர் ரங்க சாமியை சந்தித்து பேசினார். அப்போது அவர், குப்பை கொட்ட இடம் இல்லாததால் ஏனாம் மக்கள் கடும் துர்நாற்றத்திற்கு இடையே வசிக்கின்றனர். இதில் அரசியல் செய்யாமல் மக்கள் நலன் காக்க வேண்டும். குப்பை பிரச்னையில் அரசு தலையிட்டு தீர்வு காணவிட்டால் சட்ட சபையில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தபோவதாக தெரிவித்தார்.

அதை கேட்ட முதல்வர் ரங்கசாமி, ஓரிரு தினங்களில் ஏனாமில் குப்பை பிரச்னை தீர்க்கப்பட்டு விடும். அதை ஏற்ற கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் எம்.எல்.ஏ., அங்கிருந்து புறப்பட்டார்.

அவர் கூறியதாவது:

ஏனாமில் குப்பை கொட்ட இடம் இல்லாமல் வீதிகள் நாறுகிறது. இந்த நேரத்தில் பொது சுகாதாரத்தை வைத்து அரசியல் செய்வது ஏற்புடையதல்ல. ஏனாம் மக்கள் எனக்கு ஓட்டளித்து போல் முதல்வர் ரங்கசாமிக்கு ஓட்டளித்துள்ளனர். என் மேல் உள்ள கோபத்தை சாமானியர்களான மக்கள் மீது காட்ட வேண்டாம்.

இந்த பிரச்னையில் யாருக்கு பெயர் கிடைக்கிறது என்பது முக்கியம் அல்ல. குப்பை பிரச்னையை முதல்வர், முன்னாள் ஏனாம் எம்.எல்.ஏ., தீர்த்து வைத்ததாக கூட இருக்கட்டும். முதலில் ஏனாம் மக்களின் குப்பை பிரச்னை தீர்த்து வைக்க வேண்டும். இதனை முதல்வரிடம் நேரடியாக சொல்லிவிட்டேன்.

ஓரிரு தினங்கள் பார்ப்பேன். குப்பை பிரச்னை தீர்க்காவிட்டால் சட்டசபையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன்.

குப்பை பிரச்னையின் தீவிரத்தை உயரதிகாரிகளிடம் சொல்லாமல் அங்குள்ள அதிகாரிகள் விடுமுறையில் சென்றுள்ளனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களை உடனடியாக இடம் மாற்றம் செய்ய வேண்டும். மக்கள் நலனில் அக்கறை இல்லாத அதிகாரிகள் ஏனாமிற்கு தேவையில்லை' என்றார்.

கலெக்டர் விரைந்தார்



குப்பை பிரச்னை தொடர்பாக முதல்வரை சந்திக்க எம்.எல்.ஏ., புதுச்சேரிக்கு புறப்பட்ட அதே நேரத்தில், புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் ஏனாமிற்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

என்ன தான் பிரச்னை

30 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட ஏனாமில் 6 ஊர்களில் 14 வார்டுகள் உள்ளன. தினசரி 70 டன் குப்பை நகராட்சியால் சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகள் கலக்கலபேட்டையில் கொட்டப்பட்டது. நீர்நிலையில் குப்பை கொட்ட தடை விதித்ததை தொடர்ந்து மெட்டகரு பகுதியில் மின் துறைக்கு சொந்தமான இடத்தில் குப்பை கொட்ட முடிவு செய்யப்பட்டது.இதற்கான 4 ஏக்கர் நிலமும் ஏனாம் நகராட்சிக்கு மின் துறை மாற்றிக்கொடுத்தது. ஆனால், மெட்டகரு பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், குப்பையை எங்கு கொட்டுவது என தெரியாமல் நகராட்சி திணறி வருகின்றது.

Advertisement