கத்தரிக்காய் விளைச்சல் அதிகரிப்பு: விலை குறைவால் விவசாயிகள் வேதனை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் கத்தரிக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளதால் உரிய விலை கிடைக்காததால் சாகுபடி செய்த கவலை அடைந்துள்ளனர்.

ஆண்டிபட்டி பகுதியில் அணைக்கரைப்பட்டி, மூனாண்டிபட்டி, தர்மத்துப்பட்டி, நடுக்கோட்டை, குண்டலப்பட்டி, புதூர், புள்ளிமான்கோம்பை உட்பட பல கிராமங்களில் நிலத்தடி நீர் ஆதாரம் உள்ள பகுதிகளில் கத்தரிக்காய் சாகுபடி உள்ளது. கத்தரிக்காய் சாகுபடி ஆண்டு முழுவதும் இருந்தாலும் கோடையில் கூடுதலாக இருக்கும். தற்போது விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் கத்தரிக்காய்க்கு உரிய விலை கிடைக்கவில்லை. கத்தரிக்காய் சாகுபடியில் லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இரு மாதங்களுக்கு முன் நடவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு தற்போது ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

விவசாயி சுருளிவேல் கூறியதாவது: வைகை ஆற்றின் கரை பகுதியில் நிலங்கள் காய்கறி சாகுபடிக்கு ஏற்றதாக இருப்பதால் ஆண்டு முழுவதும் காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது.

கோடை காலம் கத்தரி விளைச்சலுக்கு சாதகம் என்பதால் இப்பகுதி பலரும் கத்தரி நடவு செய்தனர். தற்போது தினமும் 20 டன் கத்தரிக்காய் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. சில வாரங்களுக்கு முன் கிலோ ரூ.30 முதல் 40 வரை இருந்த கத்தரிக்காய் விலை தற்போது கிலோ ரூ.10 வரை குறைந்துள்ளது. உரம், மருந்து, கூலி ஆட்கள் செலவுகளை கணக்கிட்டால் விவசாயிகளுக்கு தற்போது நஷ்டம் ஏற்படுகிறது. முகூர்த்த சீசன் இல்லாததால் காய்கறிகள் தேவை குறைந்துள்ளது. அடுத்த மாதம் முகூர்த்த சீசன் துவங்கியதும் விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்கும் வாய்ப்புள்ளது என்றார்.

Advertisement