கடைக்கோடி விவசாயிகளையும் சென்றடையுமா திட்டங்கள்?

திருப்பூர்; ஒரே திட்டத்தை செயல்படுத்துவதில் இரு துறைகளுக்கு இடையே நிலவும் முரண், விவசாயிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில், தோட்டக்கலை மற்றும் வேளாண்துறை சார்பில், பல்வேறு மானிய திட்டங்கள் செயல்பாட்டில் இருந்து வருகின்றன.திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை, வேளாண் துறை கட்டுப்பாட்டில், சோளம், மக்காசோளம், நிலக்கடலை, பருத்தி உள்ளிட்ட பயிர்களும், தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில், வாழை, தென்னை, காய்கறி, மஞ்சள், மரவள்ளி உள்ளிட்ட அனைத்து வகை காய்கறி பயிர்களும் விளைவிக்கப்படுகின்றன. 'கடைக்கோடி விவசாயிகளுக்கும், வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் வழங்கப்படும் மானிய உதவிகள் சென்றடைய வேண்டும்' என, அரசு அறிவுறுத்தியுள்ளது.

முரண்பாடு... அதிருப்தி



வேளாண் துறையினர் கூறியதாவது:உயிர் உரம் துவங்கி விவசாய உபகரணங்கள், இடுபொருட்கள், சொட்டுநீர் பாசனம் உள்ளிட்ட தேவையான அனைத்தும், அரசின் சார்பில் வழங்கப்படுகிறது. இதில், தோட்டக்கலைத்துறை சார்பில் முழு மானியத்தில் இலவசமாக இடுபொருட்கள் வழங்கப்படுகின்றன. வேளாண்துறை சார்பில், மானியம் போக எஞ்சிய தொகை விவசாயிகளிடம் இருந்து வழங்கப்படுகிறது. ஒரே திட்டத்தை செயல்படுத்துவதில் இரு துறைகளுக்கு இடையேயான இந்த முரண், விவசாயிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

தரமற்றதை தலையில்கட்டும் நிறுவனங்கள்



வேளாண் துறை சார்பில் வழங்கப்படும் விவசாய உபகரணம் மற்றும் இடுபொருட்கள், முழு மானியத்தில் வழங்கப்படும் பட்சத்தில், நுாறு சதவீத விவசாயிகள் பயன் பெறும் வாய்ப்புள்ளது.மேலும், வேளாண் துறை சார்பில் தரமான உயிர் உரம், விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், சில நிறுவனங்கள், தரமற்ற உயிர் உரங்களை குறைந்த விலைக்கு விவசாயிகளின் தலையில் கட்டி விடுகின்றனர். திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை இதுபோன்ற பிரச்னைகளை சரி செய்யும் பட்சத்தில், வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் சேவை, அனைத்து விவசாயிகளையும் சென்றடையும்.

Advertisement