அமைச்சர்கள் ராஜினாமா; அவமானம் தவிர்க்க தமிழக அரசுக்கு இருக்கும் ஒரே வழி!

சென்னை: ஒரே நாளில், மூன்று வெவ்வேறு அமைச்சர்கள் மீது, மூன்று வெவ்வேறு நீதிமன்றங்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தது, தமிழக அரசியல் வரலாற்றில் முன் எப்போதும் நடந்திராத ஒன்று.
முதல் வழக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மீதானது. வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த குற்றச்சாட்டு குறித்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது.
'அமைச்சராக இருப்பதால் சாட்சிகள் அஞ்சுகிறார்கள்' என்பது புகார்.
அவருக்கு கொடுத்த ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'நன்னடத்தை காரணமாக ஜாமின் தரவில்லை. அமைச்சர் பதவி ஏற்க நாங்கள் ஜாமின் தரவில்லை.
செந்தில் பாலாஜிக்கு தேவை ஜாமினா, அமைச்சர் பதவியா என்று முடிவு செய்து சொல்லுங்கள்' என்று கூறி காலக்கெடு விதித்துள்ளனர். இதனால் அவரது பதவி பறிபோகும் என்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. ஆனாலும் கூட, அவரை ராஜினாமா செய்யும்படி முதல்வர் கூறவில்லை.
பொன்முடி
இன்னொரு அமைச்சரான பொன்முடி, சைவம், வைணவத்தை விலைமாதுவின் செயலோடு ஒப்பிட்டுப்பேசி, மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியவர். அவரது கட்சிப்பதவியை மட்டும் பறித்த தி.மு.க., அமைச்சர் பதவியில் நீடிக்க அனுமதி கொடுத்திருக்கிறது.
கட்சிப்பதவிக்கே தகுதி இல்லாதவர் என்றால், அமைச்சர் பதவிக்கு எப்படி பொன்முடி தகுதி பெறுகிறார் என்பதை தி.மு.க.,வும், முதல்வரும் தான் விளக்க வேண்டும்.
பொன்முடி மீது ஏன் தானாக முன்வந்து போலீஸ் வழக்கு பதியவில்லை, வேறு யாராவது என்றால் போலீசார் விட்டு விடுவார்களா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். போலீசார் வழக்கு எதுவும் பதியாத நிலையில், தாமாக முன் வந்து வழக்கு எடுத்து விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதிக்கு பரிந்துரையும் செய்யப்பட்டுள்ளது.
அப்படி இருந்தும் அவரது ராஜினாமாவை முதல்வர் கோரவில்லை. கேட்பதற்கே காது கூசும் வார்த்தைகளை, பெண்களும் இருந்த மேடையில் மைக்கில் பேசிய பொன்முடி, இன்னும் அமைச்சராகவே நீடிக்கிறார்.
துரைமுருகன்
மூன்றாவது அமைச்சர் துரைமுருகன். கட்சியில், எல்லோருக்கும் மிக மூத்த தலைவர். சில நாட்களுக்கு முன்னதாகத்தான், மாற்றுத்திறனாளிகளை, இழிவுபடுத்தும் வகையிலான வார்த்தைகளை மேடைப்பேச்சில் பயன்படுத்திவிட்டு, மன்னிப்பு கேட்டார் துரைமுருகன்.
அவர் மீதான ஊழல் வழக்குகளில் அடுத்தடுத்த நாட்களில் இரண்டு தீர்ப்புகள் வந்து விட்டன. சொத்து குவிப்பு வழக்கில் துரைமுருகனை விடுவித்தது செல்லாது என்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், அந்த வழக்கை மறு விசாரணை செய்ய வேண்டும் என்றும், 6 மாதங்களுக்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
சரியாக தேர்தல் நேரத்தில் இந்த வழக்குகளில் தீர்ப்பு வெளியாகும் வாய்ப்பு உள்ளது. ஒரு வேளை இந்த வழக்குகளில் துரைமுருகனுக்கு எதிராக தீர்ப்பு வரும் பட்சத்தில், அது சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுக்கு பெரும் பாதகமாக முடியும்.இதையெல்லாம் முதல்வருக்கு எடுத்துச் சொல்ல சரியான ஆலோசகர்கள் யாரும் இல்லை. அதனால் துரைமுருகனும் இன்னும் அமைச்சர் பதவியில் நீடிக்கிறார்.
தேவை நல்ல ஆலோசகர்கள்
அடுத்தடுத்து நீதிமன்றங்களில் குட்டு மேல் குட்டு வாங்கினாலும், துடைத்துக் கொண்டே மவுனமாக இருக்கிறது தி.மு.க., அரசு. சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த கவர்னருக்கு எதிரான வழக்கில் அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. இதை தலையில் துாக்கி வைத்துக் கொண்டாடினர் தமிழக முதல்வரும், அவரது ஆதரவு அடிப்பொடிகளும். ஆனால், அதற்கடுத்த சில நாட்களில் மூன்று அமைச்சர்கள் மீது மூன்று வெவ்வேறு நீதிமன்றங்கள் சரமாரியாக குட்டு வைத்து உத்தரவை பிறப்பித்துள்ளன.
ஆனாலும் கூட, அவர்கள் மீது முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, சமூக வலைதளத்தில் அரசு மீதும், முதல்வரின் செயல்பாடு பற்றியும் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. ஊழல் புகாருக்கு ஆளான அமைச்சர்களையும், வாய்க்கொழுப்பில் பேசிய அமைச்சரையும் ராஜினாமா செய்ய வைப்பதால் அரசுக்கு அவப்பெயர் எதுவும் ஏற்படப் போவதில்லை; மத்திய அரசுக்கு பணிந்து விட்டதாகவும் அர்த்தம் ஆகாது.தவறு கண்டவுடன் முதல்வர் நடவடிக்கை எடுத்து விட்டார் என்ற வகையில் முதல்வருக்கு நற்பெயரே கிடைக்கும்.
இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. சம்பந்தப்பட்ட மூவரையும் ராஜினாமா செய்ய வைப்பதன் மூலம், அவப்பெயர் ஏற்படுவதை அரசு தவிர்க்க முடியும்; தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த வழக்குகளில் எதிர்மறை தீர்ப்பு வரும்பட்சத்தில் முதல்வருக்கும், அரசுக்கும், கடும் நெருக்கடி ஏற்படும். 'அதைத் தவிர்க்க, குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர்களை உடனடியாக ராஜினாமா செய்ய உத்தரவிடுவதே முதல்வருக்கு சிறந்த வழியாக இருக்கும்' என்கின்றனர், அரசியல் ஆய்வாளர்கள்.










மேலும்
-
பிரீமியர் லீக் கிரிக்கெட்: சென்னை அணி 154 ரன்களுக்கு ' ஆல் அவுட்'
-
ஒரு சொட்டு நீர் கூட பாகிஸ்தானுக்கு செல்லக்கூடாது: தொலைநோக்கு திட்டம் தீட்டுகிறது மத்திய அரசு
-
யானை தந்தத்தை விற்க முயற்சி; அடகு கடை உரிமையாளர், தரகர்கள் உள்பட 7 பேர் கைது
-
கத்துவாவில் பயங்கரவாதிகள் பதுங்கலா: ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டை
-
இந்தியா Vs பாகிஸ்தான்: யாரின் விமானப்படை சக்தி வாய்ந்தது? ஓர் அலசல்
-
பழங்குடியினருடன் நடனமாடி மகிழ்ந்த துணை ஜனாதிபதி