கத்துவாவில் பயங்கரவாதிகள் பதுங்கலா: ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டை
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பார்த்ததாக பெண் ஒருவர் அளித்த தகவலின் பேரில் கத்துவா பகுதியில் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிர் இழந்தனர். நாடு முழுதும் இச்சம்பவம் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து, பாகிஸ்தானுடனான சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ள மத்திய அரசு, அந்நாட்டவர்களை வெளியேற வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது. தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் புகைப்படங்களை பாதுகாப்பு படையினர் வெளியிட்டு உள்ளனர். அவர்களை பற்றிய தகவல் தருவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை கத்துவா பகுதியில் பார்த்ததாக பெண் ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். இதன் அடிப்படையில் அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணி இயக்கத்தின் தேச விரோத செயல்பாடுகள் குறித்த தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து புல்வாமா மற்றும் பாரமுல்லா மாவட்டங்களின் பல இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். நீதிபதி முன்னிலையில் நடந்த இந்தச் சோதனையில் பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.