இந்தியாவிற்கு இடம் பெயரும் ஐபோன் உற்பத்தி: ஆப்பிள் நிறுவனம் முடிவு

6


புதுடில்லி: அமெரிக்காவில் விற்பனையாகும் ஐபோன்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


அமெரிக்காவில் விற்பனையாகும் ஐபோன்கள் பெரும்பாலானவை சீனாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் உச்சத்தை எட்டி உள்ளது. இரு நாடுகளும் தொடர்ந்து வரி விகிதங்களை உயர்த்தி வருகின்றன. இச்சூழ்நிலையில், சீனாவில் இருந்து ஐபோன் உற்பத்தியை மாற்றும்படி ஆப்பிள் நிறுவனத்திற்கு டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார்.


இந்நிலையில், அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள் அனைத்தையும் அடுத்தாண்டு முதல் இந்தியாவில் தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இந்தியாவில் உற்பத்தி வேகம் மற்றும் அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக போர் அடிப்படையாக வைத்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.


ஏற்கனவே இந்தியாவில் ஐபோன்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில், பாக்ஸ்கான் நிறுவனம் ஐபோன்களை உற்பத்தி செய்கிறது. இங்கு தயாரிக்கப்படும் 70 சதவீத ஐபோன்களில் 50 சதவீதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டை காட்டிலும் உற்பத்தி 40 சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.


உலகளவில் விற்பனையாகும் ஐபோன்களின் எண்ணிக்கையில் 20 சதவீதம் இந்தியாவில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது.


மேலும் பெங்களூருவில் ஐபோன்களை உற்பத்தி செய்வதற்கு என பாக்ஸ்கான் நிறுவனம் தொழிற்சாலை அமைத்து வருகிறது. இந்த தொழிற்சாலை விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு அதிகபட்சமாக 2 கோடி ஐபோன்களை உற்பத்தி செய்யும் அளவுக்கு வசதி உள்ளது.

Advertisement