பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ காப்பீடு

1

சென்னை: தமிழகத்தில், முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், 1.43 கோடி குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. அவர்களுக்கு ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை, மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. இதற்கு, ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் ஆண்டு வருமானம், 1.20 லட்சம் ரூபாய்க்குள் இருப்பதற்கான சான்று அவசியம்.

இந்நிலையில், 834 காப்பகங்களில், 25,533 ஆதரவற்ற குழந்தைகள் வசிக்கின்றன. அவர்களில் பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு ஆதார்அட்டை, வருமான சான்று ஏதுமின்றி, முதல்வர் காப்பீடு திட்ட அட்டை வழங்கப்பட்டு, மருத்துவ சேவை அளிக்கப்படுகிறது. அதேநேரம், பெற்றோர் இருந்தும், அவர்களால் கைவிடப்பட்ட மற்றும் பராமரிக்க முடியாத நிலையில் காப்பகங்களில் வசிக்கும், 15,092 குழந்தைகளுக்கு மருத்துவ காப்பீடு பெற, ஆதார், குடும்ப அட்டை, வருமான சான்றிதழ் தேவைப்படுகிறது. அதில் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதால், அக்குழந்தைகளுக்கும் ஆதார் அட்டையை தவிர்த்து, குடும்ப அட்டை, வருமான சான்றிதழ் அளிப்பதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அரசாணையை மக்கள் நல்வாழ்வு துறை செயலர் செந்தில்குமார் வெளியிட்டுள்ளார்.

Advertisement