கவனம் வைபவ்: சேவக் 'அட்வைஸ்'

புதுடில்லி: ''கோலி போல தொடர்ந்து 20 ஆண்டுகள் கிரிக்கெட்டில் பங்கேற்க வைபவ் முயற்சிக்க வேண்டும்,'' என சேவக் தெரிவித்துள்ளார்.
பீஹார் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. 14 வயது மட்டும் ஆன இவரை, பிரிமியர் தொடர் ஏலத்தில் ரூ. 1.10 கோடிக்கு ராஜஸ்தான் வாங்கியது. சஞ்சு சாம்சன் காயமடைய, அறிமுக வாய்ப்பு கிடைத்தது. முதல் பந்தில் சிக்சர் அடித்து அசர வைத்த வைபவ், 20 பந்தில் 34 ரன் எடுத்தார். இதுவரை 2 போட்டியில் 50 ரன் எடுத்துள்ளார்.
இவர் குறித்து இந்திய அணி முன்னாள் துவக்க வீரர் சேவக் கூறியது:
சிறப்பாக செயல்பட்டால் பாராட்டு, இல்லையெனில் விமர்சனம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொண்டு கிரிக்கெட் விளையாட வேண்டும். சர்வதேச அரங்கில் தொடர்ந்து நிலைத்து நிற்க இது உதவும். ஒரு சில போட்டிகளில் பிரபலம் ஆன பல வீரர்களை பார்த்துள்ளேன். இதன் பின் 'தங்களை நட்சத்திர வீரர்களாக' நினைத்துக் கொள்வதால், அடுத்தடுத்து ஏமாற்றி விடுகின்றனர்.
வைபவை பொறுத்தவரையில் அடுத்த 20 ஆண்டு பிரிமியர் தொடரில் விளையாட திட்டமிட வேண்டும். கோலி தனது 19 வயது முதல் தொடர்ந்து 18 ஆண்டு பிரிமியர் தொடரில் பங்கேற்கிறார். அவரைப் போல நீண்ட ஆண்டு விளையாட வேண்டும். மாறாக கோடீஸ்வரர் ஆகிவிட்டோம், இனி பிரிமியர் தொடர் மட்டும் போதும், இதில் என நினைத்தால் பாதகம் ஆகிவிடும்.
முதல் பந்தில் சிக்சர் அடித்து, சிறப்பான அறிமுகம் ஆகி விட்டோம். இனி நாம் தான் 'ஸ்டார்' என நினைத்தால், அவ்வளவு தான். அடுத்த ஆண்டே காணாமல் போய்விடுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.