ஆசிய தடகளம்: இந்திய அணி அறிவிப்பு * நீரஜ் சோப்ரா விலகல்

புதுடில்லி: இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை ஆசிய தடகள சாம்பியன்ஷிப் நடத்தப்படுகிறது. கடைசியாக பாங்காங்கில் (தாய்லாந்து) நடந்த போட்டியில் இந்தியா மூன்றாவது (6 தங்கம், 12 வெள்ளி, 9 வெண்கலம்) இடம் பிடித்தது.
இதன் 26வது சீசன், தென் கொரியாவின் குமி நகரில், வரும் மே 27-31ல் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் 59 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இரண்டு பதக்கம் (2021ல் தங்கம், 2024ல் வெள்ளி) வென்ற நீரஜ் சோப்ரா, இப்போட்டியில் இருந்து விலகினார்.
பிரவீன் வாய்ப்பு
சமீபத்திய பெடரேஷன் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட நட்சத்திரங்கள் இதில் இடம் பெற்றனர். தமிழகத்தின் பிரவீன் சித்ரவேல் ('டிரிபிள் ஜம்ப்'), வித்யா (400 மீ.,), இந்தியன் ஓபன் தொடரில் அசத்திய அன்னு ராணி (ஈட்டி எறிதல்), அவினாஷ் சபிள் (3000 மீ., ஸ்டீபிள் சேஸ்), சச்சின் யாதவ், யாஸ்விர் சிங் (ஈட்டி எறிதல்), ஜோதி (100 மீ., தடை ஓட்டம்), ஷைலி சிங், ஆன்சி சோஜன் (நீளம் தாண்டுதல்) உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
தவிர தமிழரசு, ராகுல் குமார், அபிநயா, தண்டீஸ்வரி (4X100), சந்தோஷ் குமார், சுபா (4X400) உள்ளிட்டோர் 'ரிலே' போட்டியில் இடம் பெற்றனர். இதில் சிறப்பாக செயல்படுபவர்கள், உலக தடகள சாம்பியன்ஷிப்பில் (செப். 13-21) பங்கேற்க தகுதி பெறலாம்.
தஜிந்தர் 'நோ'
கடந்த ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற குண்டு எறிதல் வீரர் தஜிந்தர் பால் டூர், பெடரேஷன் போட்டியில் ஏமாற்றினார். இதேபோல, போல் வால்ட் போட்டியில் தேசிய சாதனை படைத்த போதும், தேவ் குமார் மீனா, ஆசிய சாம்பியன்ஷிப் தகுதியை விட குறைவு உயரம் தான் தாண்டினார். இருவரும் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.
காரணம் என்ன
வரும் மே 25ல் நீரஜ் சோப்ரா, பெங்களூரு, கன்டீவ்ரா மைதானத்தில் 'நீரஜ் சோப்ரா கிளாசிக்' என்ற ஈட்டி எறிதல் போட்டியை நடத்துகிறார். இரண்டு முறை உலக சாம்பியன் ஆண்டர்சன் (கிரனடா), ஒலிம்பிக் பதக்கம் வென்ற தாமஸ் ரோலர் (ஜெர்மனி), ஜூலியஸ் யெகோ (கென்யா) உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர். தவிர செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள டைமண்ட் லீக், உலக சாம்பியன்ஷிப்பில் கவனம் செலுத்த உள்ளதால், ஆசிய போட்டியில் இவர் பங்கேற்கவில்லை.