ரிஷிவந்தியத்தில் தெரு நாய்கள் தொல்லை: மக்கள் அச்சம்

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்துள்ளது.

கடந்த,10 ஆண்டுகளுக்கு முன்பு, தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, அவற்றை பிடித்து கருத்தடை செய்தனர். மேலும், வெறிபிடிக்காமல் இருக்க தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. இதனால் தெருநாய்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

ஆனால், கடந்த பல ஆண்டுகளாக தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்படுவதில்லை. இதனால் அதன் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது.

இரவு நேரங்களில் பைக்கில் செல்பவர்களை குரைத்தவாறு துரத்தி செல்கிறது. நாய் கடித்துவிடுமோ என்ற அச்சத்தில் வேகமாக செல்பவர்கள், திடீரென கீழே விழுந்து காயமடைகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், உஷ்ணத்தாலும், உணவு கிடைக்காமல் பசியினாலும் பல நாய்களுக்கு வெறி பிடித்துள்ளது.

அவ்வாறு வெறி பிடித்த நாய்கள் தெருக்களில் செல்லும் பொதுமக்களையும், கால்நடைகளையும் கடிக்கிறது. இந்த நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,'என்றனர்.

Advertisement