ரூ.100க்கு குறைவாக யு.பி.ஐ.,சேவை இல்லையாம் காஞ்சிபுரத்தில் மீண்டும் சில்லரை பிரச்னை

காஞ்சிபுரம்:மத்திய அரசின் யு.பி.ஐ.,வசதி இப்போது அனைத்து ஸ்மார்ட் போன்கள் வாயிலாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யு.பி.ஐ., வாயிலாக பண பரிவர்த்தனை செய்வது மிக எளிதாக உள்ளதால், பொதுமக்கள் ஆர்வத்துடன் மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய அரசும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிப்பதால், வியாபாரிகளிடையேயும் யு.பி.ஐ., பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. இதனால், கடைகளில், யு.பி.ஐ., வாயிலாக வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தி வருகின்றனர்.

மேலும், சில்லறை பிரச்னைக்கும் இது தீர்வாக உள்ளது. பில் தொகையை கடையில் சரியாக செலுத்த முடிகிறது. இவ்வளவு வசதியுள்ள இச்சேவையை, ஒரு சில வியாபாரிகள் தங்களுக்கு ஏற்றாற்போல், வகுத்துக் கொள்கின்றனர்+.

குறைந்தபட்சம், 100 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால்தான், யு.பி.ஐ., சேவை பயன்படுத்த முடியும் என, தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரத்தில் உள்ள பல கடைகளில் குறைந்தபட்சம் 100 ரூபாய்க்கு மட்டுமே, யு.பி.ஐ., சேவை பயன்படுத்த முடியும் என்கின்றனர்.

வாடிக்கையாளர்களுக்கும் இது சிரமத்தை அளிக்கிறது. யு.பி.ஐ., வாயிலாக பண பரிவர்த்தனை எளிதாக மாறிய சூழலில், வியாபாரிகள் சிலர் இதுபோன்ற கட்டுப்பாடுகளை தாங்களே விதிப்பதால், டிஜிட்டல் பண பரிவர்த்தனை தொடர்பான மத்திய அரசின் நோக்கம் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. நுகர்வோருக்கும் சில்லரை பிரச்னை மீண்டும் எழுகிறது.

Advertisement