லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு: வணிக வரித்துறை அதிகாரி, மனைவிக்கு 4 ஆண்டு சிறை

8

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் லஞ்சம் வாங்கிய வழக்கில், 74 வயதான வணிக வரித்துறை அதிகாரி மற்றும் அவரது மனைவிக்கு தலா 4 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது.


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் என். ஜி.ஓ காலனியை சேர்ந்தவர் ஜெயபாலன் (வயது 74). இவரது மனைவி கோமதி ஜெயம். நாங்குநேரியில் வணிகவரித்துறை அலுவலராக 2005ல் பணியாற்றிய ஜெயபாலன் ரூ 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கினார். அவர் மனைவி கோமதி ஜெயம் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு பதிவானது.


இது தொடர்பாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான திருவனந்தபுரத்தை சேர்ந்த அசோக்குமார் என்பவர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆலோசனையின் பேரில் ஜெயபாலனிடம் அசோக்குமார் லஞ்சம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த போலீசார் அவரை கைது செய்தனர்.



அதனைத் தொடர்ந்து ஜெயபாலன் வீட்டில் லஞ்சம் ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையின் போது அவர் தனது மனைவி கோமதி ஜெயம் பெயரில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக, ஜெயபாலன் மற்றும் அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்தனர்.



இதனை விசாரித்த நீதிபதி சுப்பையா, ஜெயபாலன் மற்றும் அவரது மனைவியை குற்றவாளி என தீர்ப்பளித்து அதற்கான தண்டனை விவரங்களை அறிவித்தார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், ஜெயபாலன் மற்றும் அவரது மனைவி கோமதி ஜெயம் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Advertisement