புனே விமான நிலையத்திற்குள் புகுந்த சிறுத்தை; கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை தீவிரம்

1

புனே: புனே விமான நிலையத்திற்குள் புகுந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர்.


மஹாராஷ்டிராவில் புனே விமான நிலையம் உள்ளது. இங்கு உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்கின்றன. இந்த விமான நிலையத்தில் நேற்று காலை 7 மணிக்கு ஒரு முறையும், இரவு 8 மணிக்கு ஒரு முறையும் என இரண்டு முறை சிறுத்தை புகுந்துள்ளது.


ஓடுபாதையில் இருந்து வெறும் 500 மீ தொலையில் சிறுத்தை நிற்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க முயற்சி செய்தனர்.



வனத்துறையிடம் சிக்காமல் சிறுத்தை தப்பித்த நிலையில், கூண்டு வைத்து பிடிக்க முயற்சி நடந்து வருகிறது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: இரண்டு முறை விமான நிலையத்திற்குள் சிறுத்தை புகுந்துள்ளது.


மாலையில் ஓடுபாதையில் இருந்து 500 மீட்டர் தொலைவிலும், புதிய முனையக் கட்டடத்தில் இருந்து 800 மீட்டர் தொலைவிலும் காணப்பட்டது. கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம், என்றனர்.

Advertisement