மலையகத்து மக்களை நேசித்தவர்,தாயகத்து மக்களை பூஜித்தவர்..

அந்த 14 வயது சிறுவனுக்கு வாழ்க்கையில் பெரும் சிரமம்
பிழைக்க வழி தேடி பினாங்கு (மலேசியா) செல்லும் கப்பலில் ஏறிவிட்டார்.
அங்கு போய் உட.ல் உழைப்பு தொழிலாளியாக எல்லா வேலைகளும் பார்த்தார்.
கிடைத்த அனுபவத்தில் சிறிதளவு ரப்பர் மரத்தோட்டம் வாங்கினார், அது பெரியளவில் அவருக்கு கைகொடுத்தது.
வெகு சீக்கிரத்தில் பெரும் தொழிலதிபரானார்,பினாங்கில் உள்ள ரப்பர் தோட்டத்தில் பத்தில் ஒரு பங்கு ரப்பர் தோட்டம் இவருக்கு சொந்தமாக இருந்தது.உழைத்தால் உயரலாம் என்பதை எடுத்துக்காட்ட மலேயா நகரில் முதன் முதலாக கெடிலாக் கார் வாங்கி பயனித்தார்.
இவரிடம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வெறும் சம்பளம் மட்டும் கொடுக்காமல் ரப்பர் தோட்டம் வாங்கி கொடுத்து தன் தொழிலாளிகளை முதலாளிகளாக்கி அழகு பார்த்தார்.பிழைப்பு தேடி யார் பினாங்கு சென்றாலும் அவர்களை வாரி அணைத்து வேண்டிய உதவிகளை செய்து தந்தார்.இவரது வீடு தமிழ்நாட்டில் இருந்து செல்லும் மக்களை அணைத்து ஆதரவளிக்கும் சரணாலயமாக திகழ்ந்தது.
ஒரு கட்டத்தில் இவரிடம் உள்ள பெரிய நிலத்தை அரசின் தேவைக்கு வேண்டும் என்றம் அதற்குரிய விலை கொடுப்பதாகவும் அந்த நாட்டு அதிபர் கூறியபோது, ஒரே ஒரு வெள்ளிக்காசு கொடுங்கள் போதும் என்று சொல்லிவிட்டு நாட்டு நலனிற்காக தன்னுடைய பெரிய நிலத்தை அப்படியே வாரி வழங்கினார்.
இதன் காரணமாக அரசிற்கும் இவருக்கும் மிக நெருக்கமான உறவு ஏற்பட்டது, உங்களுக்கு ஏதாவது செய்யவேண்டுமே என்று அரசாங்கம் கேட்டபோது, எனக்கு எதுவும் வேண்டாம், இங்குள்ள பத்துமலை முருகன் கோவில் தைப்பூசத்தன்று நாட்டில் உள்ள எல்லோரும் கூடுகின்றனர் ஆகவே அன்று பொதுவிடுமுறை விடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார், அதன்படி பல ஆண்டுகளாக மலேசியாவில் தைப்பூசத்திற்கு பொதுவிடுமுறைவிடும் வழக்கம் அன்று தொட்டு இன்று வரை தொடர்கிறது.
வாரியார் சுவாமிகளில் இருந்து எம்.ஜி.ஆர்,சிவாஜி வரை யார் மலேசியாவிற்கு சென்றாலும் தங்குவது இவரது வீடாகத்தான் இருக்கும், அந்தளவிற்கு விருந்தோம்பல் செய்து சிறப்பிப்பவர்.எல்லாம் இறைவன் கொடுத்தது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர் ,அந்த இறைவனுக்கு செய்யும் தொண்டாக பல கோவில்களுக்கும் திருப்பணிகள் செய்துள்ளார்.
உத்திரகோசமங்கை மரகதநடராஜர் வழிபாடு என்பது இவரது காலத்திலேயே பிரபலமானது,மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதியை அந்தக்காலத்திலேயே ஏசி வசதி செய்து கொடுத்தார் இதனால் பக்தர்கள் குளுகுளு என்று குளுமையை அனுபவித்தபடி தரிசனம் செய்வர்,இப்படி பல விஷயங்கள் சொன்னால் பட்டியல் நீளும்.
காலத்திற்கும் தன் பெயரைச் சொல்லும் அளவிற்கு ஒரு காரியம் செய்யவேண்டும் என்று யோசித்தார் தான் பிறந்த திருப்பத்துாரில் பள்ளிப்படிப்பை முடித்த மாணவ,மாணவியர் கல்லாரி படிப்பை தொடர வெளியூர்களுக்கு பயணம் செய்யவேண்டிய சூழ்நிலை இருப்பதைப் உணர்ந்து இங்கேயே கல்லுாரியைக் கட்டுவோம் என முடிவு செய்து கட்டியதுதான் இன்றைக்கு திருப்பத்துாரின் பெருமையாக திகழும் ஆறுமுகம் சீதையம்மாள் கல்லுாரி.
தன்னை ஒரு தோட்டத்தில் விட முடியாது என்று சொன்னதான் காரணமாக சினிமாவில் வருவது போல அந்த தோட்டத்தையே விலைக்கு வாங்கியவர்,தான்விரும்பியபடி நல்ல செய்திகள் வரவில்லையே என்று ஆதங்கப்பட்டவர் அடுத்த நாளே பத்திரிகை தொழிலை துவங்கினார்,எளிய மக்களுக்கு தரமான ஆடைகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக ஜவுளிக்கடையை துவக்கியவர்,,இப்படி மக்களுககாக சமுதாயத்திற்காக நாளெல்லாம் பொழுதெல்லாம் உழைத்தவரான ஆறுமுகம்பிள்ளை இறந்து 36 வருடமாகிறது,ஆனாலும் அவரை நெஞ்சில் நினைத்து போற்றுவோர் இன்றைக்கும் பலர் உண்டு,நாளை அவரது 27/4/2025 நினைவு நாள்.
தகவல்:அன்பானந்தன்,திருப்பத்துார்.
-எல்.முருகராஜ்