டில்லி உஷ்ஷ்ஷ்: நேரம் வர காத்திருக்கும் மோடி

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பாக்., பயங்கரவாதிகளின் தாக்குதல், நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 'பாகிஸ்தானுக்கு எதிராக மோடி ஏதாவது செய்ய வேண்டும்' என, மக்கள் விரும்புகின்றனர். இந்த தாக்குதல் நடந்தபோது, சவுதி அரேபிய பயணத்தில் இருந்த பிரதமர் மோடி, தன் பயணத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு டில்லி திரும்பினார்.

பிரதமர், விமான நிலையத்திலிருந்து லோக் கல்யாண் சாலையிலுள்ள தன் வீட்டிற்கு வந்ததுமே அதிகாரிகள் கூட்டம் இருக்கும் என்பதால், தாக்குதல் தொடர்பான விபரங்களை, அந்த கூட்டத்தில் பிரதமருக்கு தெரிவிக்க அதிகாரிகள் தயாராக காத்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு ஒரு உத்தரவு வந்தது.

'காலை 6:00 மணிக்கு பாலம் விமானப்படை விமான நிலையத்திற்கு வரவும்; பிரதமர் மோடி, விமான நிலையத்திலேயே அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துவார்' என, சொல்லப்பட்டதாம். டில்லியில் இறங்கியதும், விமான நிலையத்திலேயே ஆலோசனைக் கூட்டம் நடத்தினார் மோடி. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி மற்றும் உளவுத்துறை, 'ரா' அமைப்பின் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

அதன்பின், அமைச்சரவைக் கூட்டம் என பல ஆலோசனைக் கூட்டங்கள் நடந்தன. இதில், பாகிஸ்தானுக்கு எப்படி பதிலடி கொடுப்பது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாம். இதற்கிடையே, பாகிஸ்தான் தன் படைகளை இந்திய எல்லை பகுதியில் குவித்து வருகிறது.

'உடனடியாக எதையும் செய்ய மாட்டார் மோடி. தகுந்த நேரத்திற்காக காத்திருப்பார். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், இதன் பின்னால் இருந்தோர், அத்துடன் பாகிஸ்தானுக்கும் நிச்சயம் பெரிய அடி காத்திருக்கிறது' என்கின்றனர்.

'கடந்த 2019ல் புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் துணை ராணுவப் படையினர் கொல்லப்பட்டனர். அந்த ஆண்டு பிப்ரவரியில் லோக்சபா தேர்தல் நடக்க இருந்தது. எனவே, தாக்குதல் நடந்த 10 நாளில், இந்திய விமானங்கள், பாகிஸ்தானின், 'பாலகோட்' என்ற இடத்தில் இருந்த பயங்கரவாதிகளின் கூடாரத்தை அடித்து நொறுக்கியது. அதனால், விரைவில் ஏதாவது அதிரடியை நடத்துவார் மோடி' என, டில்லி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Advertisement