தொடர் திருட்டு: மக்கள் அச்சம்

திருப்பூர்: காங்கயம் பகுதியில் தொடர்ந்து நடக்கும் திருட்டு சம்பவங்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கயம், வாய்க்கால் மேடு, சந்தியா நகரைச் சேர்ந்தவர் முகமது, 65. ஸ்டேஷனரி பொருள் மொத்த வியாபாரி. அவர் தனது மனைவியுடன் கடந்த 12 ம் தேதி, சென்னையில் உள்ள மகள் வீட்டுக்குச் சென்று விட்டார்.

இந்நிலையில் பூட்டியிருந்த அவர் வீட்டின் பூட்டு உடைத்து கதவு திறந்து கிடந்தது குறித்து அருகில் இருந்தவர்கள் தகவல் அளித்தனர்.திரும்ப வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைத்து கதவைத் திறந்து, பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகள் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டது தெரிந்தது.

இது குறித்த புகாரின் பேரில் காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து இதில் ஈடுபட்டவர்களைத் தேடுகின்றனர்.கடந்த வாரம், காங்கயம் நத்தக்காடையூரில், தங்க ராஜ் என்பவர் வீட்டிலும் இது போல் கதவை உடைத்து 17.5 பவுன் தங்க நகைகள், 1.20 லட்சம் ரூபாய் ஆகியன திருடப்பட்டது.

இந்த சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகள் பிடிபடாத நிலையில், அதே போல் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது காங்கயம் பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement