என் பேனா மனிதாபிமானம் பேசும்; மனம் திறக்கும் சித்ரா விஜயன் ஐ.ஏ.எஸ்.,

குடிநீர் வினியோகத்தை சீராக்க அதிகாலை 'விசிட்', குப்பை பிரச்னைக்கு 'குட்பை' சொல்ல வைக்க பணியாளர்களிடம் காட்டும் கறார், அதிகாரிகள் முதல் அலுவலர்கள் வரை 'டென்ஷனை' தீர்க்க யோகா, தியானம், பள்ளி மாணவர்கள் மேம்பாட்டில் காட்டும் அக்கறை, வேலைக்கு செல்லும் பெண்களின் குழந்தைகளுக்கான 'கேர் டேக்' சென்டர், மதுரையை துாசியில்லாத நகராக்கி அழகுப்படுத்த, பசுமையாக மாற்ற வேண்டும் என்ற இலக்கு... என தனது சுறுசுறு பணிகளால் பாசக்கார மதுரை மக்கள் மனங்களை கவர்ந்து வருகிறார், மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன் ஐ.ஏ.எஸ்,.
இவர் தினமலர் சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக மனம் திறந்த தருணம்...
பிறந்தது, படிச்சது எல்லாம் திருவனந்தபுரம். அப்பா கே.கே.விஜயன், வழக்கறிஞர். அம்மா சுஜாஸ்ரீ குடும்பத்தலைவி. தம்பி அமெரிக்காவில் பேராசிரியராக உள்ளார். பி.இ., முடித்து பெங்களூருவில் சாப்ட்வேர் இன்ஜினியர், பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி என சில பணிகள் வகித்தேன்.
இன்ஜினியரான அர்ஜூன் மதுசூதனனுடன் திருமணமாகி, குழந்தைக்கு 3 வயதான போது, எனது 28 வயதில் தான் ஐ.ஏ.எஸ்., படிக்க வேண்டும் என்ற திடீர் எண்ணம் வந்தது. இதற்கு காரணம், வங்கி அதிகாரியாக இருந்தபோது மக்களுடன் ஏற்பட்ட தொடர்பு, அவர்களுக்கு உதவிட வேண்டும் என்ற எண்ணம் தான். சிவில் சர்வீஸ் அதிகாரி ஆனால் இன்னும் நிறைய மக்கள் சேவை செய்யலாம் என்று நினைத்தேன்.
எனது பள்ளி நாட்களில் சினிமா பார்க்கும் போது, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., கேரக்டர்களாக நடிகர்கள் வந்து போகும் போது, அந்த பதவிகள் மீது பிரம்மிப்பு ஏற்பட்டு, சின்னதாக என் மனசுக்குள் ஐ.ஏ.எஸ்., கனவு துளிர்விட்டதும் உண்டு.
என்றாலும் கல்லுாரி படிப்பு முடிந்ததும் வேறு வேலைக்கு சென்றுவிட்டேன்.
ஓராண்டு படிப்பு தான்
திருமணத்திற்கு பின் ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்று நினைத்து, நான் ஒதுக்கிய நாட்கள் ஓராண்டு மட்டும் தான். தீவிரமாக படித்தேன். ஓராண்டில் பலன் கிடைத்தது. முதல் முறை ஐ.ஆர்.எஸ்., கிடைத்தது. மீண்டும் எழுதி 2019ல் ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றேன். தர்மபுரி சப் கலெக்டர், விழுப்புரம் கூடுதல் கலெக்டர், மகளிர் மேம்பாட்டு கழகம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், தமிழ்நாடு இ-கவர்னன்ஸில் இணை இயக்குநர் என பதவிகள் வகித்து, தற்போது பெருமை மிக்க மதுரை மாநகராட்சியின் கமிஷனராக உள்ளேன்.
கூடுதல் கலெக்டராக இருந்தபோது இலவச வீடுகள் கட்டும் திட்டத்தில், ஏழ்மை நிலையில் உள்ள பல ஆயிரம் மக்களுக்கு இலவச வீடுகள் கட்டித்தந்ததற்காக அந்த மக்கள் மானசீகமாக எனக்கு அளித்த ஆசீர்வாதத்தை தான் முதல் முறையாக உணர்ந்தேன்.
ஐ.ஏ.எஸ்., ஆனதற்காக முதன்முதலாக பெருமைப்பட்டேன்.
மதுரையும் நானும்
'எந்த விஷயத்தையும் மாநிலம் யோசிக்கும் முன் மதுரை நடத்தி காட்டும்' என்பதை கேள்விப்பட்டுள்ளேன். இங்கே ஏராளமான வளங்கள் உள்ளன. மதுரையில் மாநகராட்சி கமிஷனராக பணியாற்றிய பலரை இன்னும் மதுரை மக்கள் நினைக்கின்றனர். அவர்கள் குறித்து என்னிடம் பேசுகின்றனர். அந்த அதிகாரிகள் போல், முத்திரை பதிக்கும் நல்ல திட்டங்களை இங்கே கொண்டுவர வேண்டும் என நானும் நினைக்கிறேன்.
துாய்மையாக, பசுமையாக மதுரையை மாற்ற வேண்டும் என்ற முயற்சியை மேற்கொண்டுள்ளேன். மதுரை மக்களின் பொழுதுபோக்கிற்கு பெரிதாக எதுவும் இல்லை. இதற்காக நகரில் ஏதாவது ஒரு ரோட்டை தேர்வு செய்து இரவு நேரத்தில் 'புட் ஸ்ட்ரீட்' என்ற பெயரில் குழந்தைளுடன் பெற்றோர் பங்கேற்று பொழுதுபோக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் நிகழ்ச்சி நடத்த திட்டம் உள்ளது.
சவால்களை எதிர்கொள்வது எப்படி
ஐ.ஏ.எஸ்., அதிகாரி என்றாலே சவால்களும் இருக்கத்தான் செய்யும். அதையெல்லாம் சமாளித்து தான் கடக்க வேண்டும். சவால், சோர்வான நேரங்களில் எனக்கு யோகாவும், தியானமும் தான் கை கொடுக்கின்றன.இதனால் தான் மாநகராட்சியில் ஊழியர்களை யோகா செய்யுங்கள் என வலியுறுத்துகிறேன். பயிற்சியும் அளிக்க ஏற்பாடு செய்துள்ளேன்.
என் பணியில் சுகாதாரம், கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகிறேன். அதையும் தாண்டி என் பேனா எப்போதும் மனிதாபிமான நடவடிக்கைக்காகவே பயன்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன் என்கிறார் கமிஷனர் சித்ரா விஜயன் ஐ.ஏ.எஸ்.,
ஐ.ஏ.எஸ்., கனவு நனவாக 'டிப்ஸ்'
ஐ.ஏ.எஸ். கனவில் உள்ள இளைஞர்கள் முதலில் உங்களை நீங்கள் நம்ப வேண்டும். 'எப்படி மரம், கிளை, குருவியை தாண்டி அர்ச்சுனனின் கண்களுக்கு குருவியின் கண் மட்டும் தெரிந்ததோ அதுபோல் சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு இலக்கு மட்டும் தான் மனதில் இருக்க வேண்டும். இது தான் வெற்றியின் மந்திரம். நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போதே நுாலகத்தில் உறுப்பினராகி புத்தகங்கள் படிப்பேன்; நாளிதழ்கள் படிப்பேன். இன்றும் தொடர்கிறேன். நிறைய படிக்க வேண்டும்; விடா முயற்சி வெற்றியை தரும்.
- சித்ரா விஜயன்
மேலும்
-
டில்லியில் 5 ஆயிரம் பாகிஸ்தானியர்கள்; அடையாளம் கண்டது உளவுத்துறை!
-
விவசாயிகள் தொழில் முனைவோராக மாறணும்; கோவையில் துணை ஜனாதிபதி பேச்சு
-
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும்: நயினார் நாகேந்திரன் பேட்டி
-
ஒரு நிமிடத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் பாலைவனமாவதாக ஐ.நா எச்சரிக்கை
-
யார் முகத்தில முழிச்சேனோ?
-
புதுச்சேரியில் பா.ஜ., பிரமுகர் வெட்டிக்கொலை