மறுகூட்டலில் மதிப்பெண் பெற்ற மாணவி பி.யூ.சி., 2ம் ஆண்டு தேர்வில் முதலிடம்

ஷிவமொக்கா : பி.யூ.சி., இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவில், வேதியியல் பாடத்தில் 99 மதிப்பெண்கள் பெற்ற மாணவி, மறு மதிப்பீட்டில், 100 மதிப்பெண் பெற்றதால், மொத்தம் 600 மதிப்பெண் பெற்று 2024 - 25ம் ஆண்டுக்கான தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

கர்நாடகாவில் மார்ச் 1ம் தேதி முதல் 20ம் தேதி வரை பி.யூ.சி., இரண்டாம் ஆண்டு தேர்வு நடந்தது. ஏப்., 9ம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், வேதியியல் பிரிவில் அமுல்யா காமத், தீக் ஷா ஆகிய இரு மாணவியரும் 99 மதிப்பெண் பெற்றிருந்தனர். மொத்தம் 600க்கு 599 மதிப்பெண் பெற்று இருவரும் முதலிடத்தை பகிர்ந்து கொண்டனர்.

இதில் மாணவி தீக் ஷா, விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்திருந்தார். நகல் கிடைத்தவுடன், பார்வையிட்டார். அதில், வேதியியலில், 99 மதிப்பெண் என்று குறிப்பிட்டிருந்தது. அதை கூட்டி பார்த்தபோது, 100 மதிப்பெண் வந்தது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவரும், பெற்றோரும் முறையிட்டனர். ஆய்வு செய்யப்பட்டு, வேதியியல் பாடத்தில் மாணவி தீக் ஷாவுக்கு 100 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநில அளவில் அவர் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

ஷிவமொக்கா மாவட்டம், தீர்த்தஹள்ளியின் மேகரவள்ளியை சேர்ந்த தந்தை ராகவேந்திரா கல்லுார், தாய் உஷா இருவரும் அரசு பள்ளியில் ஆசிரியர் - ஆசிரியையாக பணியாற்றி வருகின்றனர்.

பெட்டமக்கியில் உள்ள சஹயாத்ரி உயர்நிலைப் பள்ளியில், தீக் ஷா படித்தார். மாநில அளவில் முதலிடம் பிடித்து, மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இது குறித்து தீக் ஷா கூறியதாவது:

பி.யூ.சி.,யில் 599 மதிப்பெண் பெற்றிருந்தேன். ஆனால், என் பெற்றோரின் அறிவுரைப்படி, வேதியியல் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தேன். விடைத்தாளின் முதல் பக்கத்திலேயே ஒரு மதிப்பெண் குறைவாக இருந்தது.

மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தபோது, ஒரு மதிப்பெண் கூடுதலாக கிடைத்து, மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement