ராஜமலையில் ரம்மியம் குவிந்த சுற்றுலா பயணிகள்

மூணாறு : ராஜமலையில் கோடை மழையின்போது சூழும் மேகங்கள், கூட்டமாக சுற்றிதிரியும் வரையாடுகள் என நிலவும் மாறுபட்ட சூழலை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

கேரள மாநிலம் மூணாறு அருகில் உள்ள இரவிகுளம் தேசிய பூங்காவுக்கு உட்பட்ட ராஜ மலையில் அபூர்வ இன வரையாடுகளை பார்க்க சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் அனுமதிக்கின்றனர்.

தற்போது அப்பகுதியில் தினமும் மதியத்திற்கு பிறகு கோடை மழை பெய்து வருகிறது. அப்போது மேகங்கள் சூழ்ந்து ' ஜில்' என இதமான சூழல் நிலவுகிறது. மழை பெய்வதற்கு முன் வரை மலை மீது காணப்படும் வரையாடுகள் மழையுடன் மேகக் கூட்டங்கள் சூழும்போது கூட்டமாக ரோட்டிற்கு வரத்துவங்குகின்றன. மழை, மேக கூட்டம், வரையாடு கூட்டம் என நிலவும் மாறுபட்ட சூழலை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். ராஜமலைக்கு 'ஆன்லைன்' வாயிலாக நுழைவு சீட்டு பெற்று தினமும் 2800 பயணிகள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement