கூப்பிட ஆள் இல்லாததால் தனியாக புலம்பும் விஜய்; அமைச்சர் கோவி. செழியன் விமர்சனம்

தஞ்சை: அழைக்க யாரும் இல்லாததால் தனித்து நின்று நடிகர் விஜய் புலம்புகிறார் என்று அமைச்சர் கோவி. செழியன் விமர்சித்துள்ளார்.



தஞ்சை மாவட்டம், நாச்சியார்கோவில் அருகே ஏனநல்லூர் கிராமத்தில் நகர பஸ் சேவையை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.


அப்போது நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அவரிடம் பொய் சொல்லி இனி ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்ற முடியாது என்று நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய் பேசியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.


அதற்க அமைச்சர் கோவி. செழியன் அளித்த பதில் வருமாறு;


புதியதாக கட்சி தொடங்கி இருப்பவர் (நடிகர் விஜய்) இன்றைக்கு தி.மு.க.,வை எதிர்க்கிற தொனியில் தம் பேச்சை தொடங்கி இருக்கிறார். பொதுவாக இன்றைக்கு இருக்கிற அரசியல் நிலவரம், 2026 தேர்தலில் தனித்த பெரும்பான்மையுடன் தி.மு.க., கூட்டணி ஆட்சியை அமைக்கும் என்ற நிலை வந்த வண்ணம் இருக்கிறது.


அதில் இருவர் சேர்ந்து கூட்டணியா, மூவர் சேர்ந்து கூட்டணியா, தவிர்க்க முடியாத கூட்டணியா என பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணி, எண்ணெய்யும், தண்ணீருமான இருந்த கூட்டணி, நிர்பந்திக்கப்பட்ட நிலையில் கூடி விட்டார்கள்.


இதில் பா.ஜ., இல்லாத நிலையில் அ.தி.மு.க., விஜய் சேருவார் என்று எதிர்பார்த்தது. அது இல்லாதது என்றாகிவிட்டது. அழைப்பதற்கு யாரும் இல்லாத நிலையில் அவர் தனித்த நிலையில் நின்று புலம்புகிறார்.


எது எப்படி என்று இருந்தாலும் தேர்தல் என்று வந்துவிட்டால் முதலிடத்தில் நின்று வெற்றி பெறுகிற கட்சி திமுக தான் . 2ம் இடம் யாருக்கு என்பது தான் இன்றைக்கு போட்டியே தவிர... 2ம் இடத்தில் த.வெ.க.,வா? 2வது இடத்தில் அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியா? 2வது இடத்தில் கூட்டணி முடிவெடுக்காத பாமக அல்லது நாம் தமிழர் கட்சியா என்பது தான் போட்டியே தவிர... முதலிடத்தில் நின்று, வென்று 2026ல் தி.மு.க., ஏழாவது முறையாக, 2வது முறை முதல்வராக ஸ்டாலின் தான் ஆகிறார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.


எனவே, 2ம் இடத்தில் யார் என்பது அவர்களின் போட்டியில் பேசுகிற பேச்சு தானே தவிர, தி.மு.க.,வின் வெற்றியை விஜய்யின் பேச்சு பாதிக்காது, பாதிக்கிற சூழல் தமிழகத்தில் இல்லை.


இவ்வாறு அமைச்சர் கோவி செழியன் கூறினார்.

Advertisement