தொடர்ச்சியாக 5வது வெற்றி; புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியது மும்பை

மும்பை: பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் லக்னோவுக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
நடப்பு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் புள்ளிப்பட்டியலில் தலா 10 புள்ளிகளுடன் பட்டியலில் 5 மற்றும் 6வது இடங்களில் இருக்கும் மும்பை, லக்னோ அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. வான்கடே மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, களமிறங்கிய மும்பை அணிக்கு ரோகித் ஷர்மா மற்றும் ரிக்கெல்டன் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் இரண்டு பந்துகளை சிக்சர்கள் விளாசிய ரோகித் ஷர்மா, 6 பந்துகளில் 12 ரன்கள் அடித்து அவுட்டானார். தொடர்ந்து, மறுமுனையில் அபாரமாக ஆடிய ரிக்கெல்டன் 25 பந்துகளில் அரைசதம் அடித்ததார். 32 பந்துகளில் 58 ரன்களில் அவுட்டானார்.
வில் ஜேக்ஸ், சூர்யகுமார் யாதவ் ஜோடி மளமளவென ரன்களை குவித்தது. ஜேக்ஸ் (29) ஆட்டமிழந்தாலும், சூர்யகுமார் யாதவ் தன்னுடைய அதிரடியை நிறுத்தவில்லை. 35 ரன்களில் இருந்த போது, சிக்ஸ் அடித்த சூர்யகுமார் யாதவ், பிரீமியர் லீக் தொடரில் அதிவேகமாக 4,000 ரன்களை கடந்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை படைத்தார். இவர், 2,714 பந்துகளில் இந்த சாதனையை படைத்தார். கெயில் (2,653), டிவில்லியர்ஸ் (2,658) முதல் இரு இடங்களில் உள்ளனர்.
28 பந்துகளில் 54 ரன்கள் குவித்த போது அவர் அவுட்டனார். தொடர்ந்து, நமன் தீர் (25 நாட் அவுட்), கோர்பின் போஸ் (20) ஆகியோரின் பங்களிப்பினால், மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் குவித்தது.
மயங்க் யாதவ், ஆவேஷ் கான் தலா 2 விக்கெட்டுகளும்,பிரின்ஸ் யாதவ், திக்வேஷ், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம், 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. 10 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 6வது வெற்றியை பதிவு செய்துள்ளது. 4 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்த மும்பை அணி, கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது.
மும்பை அணி சார்பில் பும்ரா 4 விக்கெட்டுகளும், போல்ட் 3 விக்கெட்டுகளும்,வில் ஜேக்ஸ் ஒரு விக்கெட்டும், போஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்
