சினிகடலை

நடிகர் யுவராஜ் குமார் நடிக்கும், எக்கா திரைப்பட டீசர், சமீபத்தில் வெளியானது. யுவராஜ் குமார் புதிய கெட்டப்பில் தோன்றுகிறார். இத்திரைப்படம் ஜூன் 6ம் தேதி, திரைக்கு வரவுள்ளது. சம்பதா, சஞ்சனா ஆனந்த் நாயகியராக நடித்துள்ளனர். யுவராஜ் குமாரின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அவர் தன் கையில் துடைப்பத்தை துப்பாக்கி போன்று பிடித்துள்ள காட்சி உள்ளது. அதுல் குல்கர்னி, ஆதித்யா உட்பட, நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்துள்ளது. படத்தின் கதையை படக்குழுவினர் கசிய விடாமல் ரகசியமாக வைத்துள்ளனர்.

இயக்குனர் மன்சோரே இயக்கத்தில் தயாராகும், துார தீர யானா திரைப்படத்தில் ஆறு பாடல்கள் உள்ளன. இதில் ஒரு பாடல் சமீபத்தில் வெளியானது. கவிராஜ் எழுதிய இப்பாடலை பிரமோத் மரவந்தே, கிரண் காவேரப்பா பாடியுள்ளனர். டைட்டில் பாடலை மே மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். பெங்களூரு, உடுப்பி, குந்தாபுரா, கோகர்ணா, முருடேஸ்வரா, கார்வார் உட்பட அழகான சூழலில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். விஜய் கிருஷ்ணா, பிரியங்கா குமார் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்துள்ள பிரியங்கா குமார், தற்போது அடுத்தடுத்த பட வாய்ப்புகள் பெறுகிறார்.

தன் முன்னாள் கணவர் சந்தன் ஷெட்டியுடன், முத்து ராக்ஷசி படப்பிடிப்பை நடிகை நிவேதிதா முடித்துள்ளார். விரைவில் திரைக்கு வரவுள்ளது. இவர்கள் விவாகத்து செய்து கொண்டாலும், படங்களில் ஜோடியாக நடிக்கின்றனர். இரண்டு, மூன்று படங்களில் இணைந்து நடித்தனர். நிவேதிதா அடுத்த பட வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார். இவர் சோஷியல் மீடியாவில் எப்போதும் பரபரப்பாக இருப்பவர். நடன வீடியோக்களை வெளியிடுகிறார். சமீபத்தில் குட்டை உடையணிந்து, கன்னட பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டார். இதை பார்த்து பலரும் முகம் சுளித்து கமென்ட் செய்தனர். சிலர் மீண்டும் காதலில் விழுந்துள்ளீர்களா என, கிண்டலாக கேள்வி எழுப்பினர்.

நடிகர் ரக்ஷித் ஷெட்டி தயாரிப்பில் திரைக்கு வந்த, மித்யா திரையரங்குகளில் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. ஆனால் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று, விருதுகளை தட்டி சென்றது. தற்போது 'அமேசான் பிரைம்' ஓ.டி.டி., பிளாட்பார்மில் வெளியிடப்பட்டுள்ளது. மாஸ்டர் அதீஷ் ஷெட்டி, மிதுன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பெற்றோரை இழந்த மிதுன் என்ற சிறுவன், தன் கனவை நிறைவேற்ற போராடும் கதை கொண்டது. இந்த திரைப்படத்தில் மூன்று கதாபாத்திரங்களை சுற்றிலும் கதை நகர்கிறது.

துனியா சூரி இயக்கும், பாப் கார்ன் மங்கி டைகர் திரைப்படம் மூலம், திரையுலகில் நுழைந்தவர் நடிகை சப்தமி கவுடா. இவருக்கு காந்தாரா திருப்பு முனையாக அமைந்தது. இந்த அளவுக்கு படம் வெற்றி பெறும் என்பதை, படக்குழுவினரே எதிர்பார்க்கவில்லை. இதில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்திய சப்தமி கவுடாவுக்கு, கன்னடம் மட்டுமின்றி வேறு மொழிகளிலும் பட வாய்ப்புகள் தேடி வருகின்றன. நடப்பாண்டு தெலுங்கில் ஒரு படம், கன்னடத்தில் இரண்டு படங்கள் திரைக்கு வரவுள்ளன. தற்போது பாலிவுட்டிலும் நுழைந்து, தி வாக்சின் வார் என்ற படத்தில் நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் பிசியாக நடிப்பவர் நடிகை பூஜா ஹெக்டே. கர்நாடகாவின் மங்களூரை சேர்ந்தவர் என்றாலும், இதுவரை கன்னட படங்களில் நடித்தது இல்லை. முதன் முறையாக, நடிகர் சுதீப் நடிக்கும் பில்லா ரங்கா பாஷா திரைப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். தெலுங்கு, தமிழ், ஹிந்தியில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்ததால், அவர் கன்னடத்தில் ஆர்வம் காட்டவில்லை. இவரது பெற்றோர், கன்னடத்தில் நடிக்க வேண்டும் என, நெருக்கடி கொடுத்தனர். கதையும் பிடித்ததால் அந்த படத்தில் நடிக்க சம்மதித்தாராம்.

பெற்றோர் நெருக்கடி

Advertisement