ரயில்வே மேம்பால பணிகள் 60 சதவீதம் நிறைவு

சிவகாசி: சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணி 60 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், மேற்கு பகுதியில் உள்ள துாண்களை கான்கிரீட் பிளாக்குகளால் இணைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.

சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டில் சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் அமைக்கும் திட்டத்திற்கு 2024 பிப். 26 ல் அடிக்கல் நாட்டப்பட்டது. 2024 ஜூலை 26 கட்டுமான பணிகள் துவங்கியது. ரயில்வே தண்டவாளத்திற்கு கிழக்கு பக்கம் 11 துாண்கள், மேற்கு பக்கம் 6 துாண்கள் என மொத்தம் 17 தூண்கள் அமைக்கும் பணி நிறைவடைந்தது.

நெடுஞ்சாலை துறை தர கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்து சான்று அளித்த பின்னர் பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. கிழக்கு பகுதியில் 9 துாண்களை கான்கிரீட் பிளாக்குகளால் இணைத்து பாலம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது.

மேற்குப் பகுதியில் மின் கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் இருந்ததால் பாலம் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. மின்கம்பங்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து தற்போது மேற்கு பகுதியிலும் துாண்களை இணைக்கும் பணி துவங்கியுள்ளது. 60 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டுமான பணிகள் முடிந்து பாலம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில்:

ரயில்வே மேம்பால பணியில் 17 துாண்களில் கிழக்குப் பகுதியில் 9 துாண்கள் இணைக்கப்பட்டுள்ளது. ரயில்வே தண்டவாளத்தின் மேல் பாலம் அமைக்கும் பணி ரயில்வே துறை சார்பில் வேகமாக நடந்து வருகிறது.

தற்போது மேற்குப் பகுதியிலும் துாண்களை இணைத்து பாலம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே பாலம் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும், என்றனர்.

Advertisement