வீராணம் ஏரியில் குறையும் நீர் மட்டம்

சேத்தியாத்தோப்பு : கடும் வெயில் காரணமாக வீராணம் ஏரியில் நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது.

கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடியில் வீராணம் ஏரி வீ.என்.எஸ்., மதகில் துவங்கி லால்பேட்டை வரை 14 கி.மீ., நீளம், 5 கி.மீ., அகலம் கொண்டுள்ளது. கீழணையில் இருந்து வடவாற்றில் வரும் தண்ணீர் வீராணம் ஏரியில் 47.50 அடிக்கு, 1,465 மில்லியன் கன அடி வரை தேக்கி வைக்கப்படும். இதன்மூலம், சம்பா பருவங்களில் டெல்டா கடைமடை பகுதியில் 54,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும், வீராணம் ஏரியிலிருந்து விநாடிக்கு 73 கன அடி தண்ணீர் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த மாதம் வரை ஏரியில் முழு கொள்ளளவான 1,465 மில்லின் கன அடி தண்ணீர் தேக்கி, பராமரிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 10 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஏரியில் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி நீர்மட்டம் 44.50 அடியாகவும், 1,265 மில்லியன் கன அடியாகவும் குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Advertisement