ஆன்லைனில் ஜெராக்ஸ் மிஷின் வாங்கி கள்ள நோட்டு தயாரித்தவர் கைது

1

பண்ருட்டி : பண்ருட்டி அருகே, டாஸ்மாக் கடையில் 500 ரூபாய் கள்ள நோட்டு மாற்ற முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி மணி நகரில் டாஸ்மாக் மதுபான கடையில் நேற்று மதியம் மேற்பார்வையாளர் மீனாட்சிசுந்தரம் பணியில் இருந்தார்.

அப்போது, விற்பனையாளரிடம் ஒருவர் 500 ரூபாய் நோட்டு கொடுத்து ஒரு குவாட்டர் வாங்கி சென்றார்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் 500 ரூபாய் நோட்டு கொடுத்து குவாட்டர் வாங்கினார். சந்தேமடைந்த மேற்பார்வையார் மீனாட்சிசுந்தரம், ரூபாய் நோட்டை சோதனை செய்த போது, கள்ளநோட்டு எனத் தெரிந்தது. இதுகுறித்து அவர், பண்ருட்டி போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.

அவர், புதுச்சேரி மாநிலம் திருபுவனை அடுத்த பிடாரிக்குப்பத்தைச் சேர்ந்த சிவசங்கரன்,36; என்பதும், ஜெராக்ஸ் மிஷின் மூலம் 500 ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து, டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கியது தெரிந்தது. அருகில் உள்ள மதுபான கடைகளில் வாங்கினால் தெரிந்து விடும் என்பதால் கடந்த சில வாரங்களாக பண்ருட்டிக்கு வந்ததும் தெரிந்தது.

விசாரணையில், சிவசங்கரன் ஏற்கனவே ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்துவந்துள்ளார்.

பின்னர் அப்பணியிலிருந்து விலகி விட்டார். அதன் பிறகு வேலைக்கும் செல்லவில்லை. இந்நிலையில் அவருக்கு கடன் பிரச்னையும் இருந்தது.

அதை தொடர்ந்து, ஆன்லைனில் ஜெராக்ஸ் மிஷின் வாங்கி, ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து, கடைகளில் கொடுத்து மாற்றியது தெரிய வந்தது.

அதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பின், பிடாரிகுப்பத்தில் அவரது வீட்டிற்கு சென்று ஜெராக்ஸ் மிஷின், 500 ரூபாய் கள்ள நோட்டுகள் மூன்றை பறிமுதல் செய்தனர்.

கள்ள நோட்டு மாற்ற முயன்றவரை உடனடியாக கைது செய்த போலீசாரை எஸ்.பி., ஜெயக்குமார் பாராட்டினார்.

Advertisement