வருவாய்க்கு அதிகமாக ரூ.3.59 கோடி சொத்து குவிப்பு; மாநகராட்சி இன்ஜினியர், மனைவி மீது வழக்கு

16


திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி இன்ஜினியர் மற்றும் அவரது மனைவி 6 ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.59 கோடி சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


திருநெல்வேலி மாவட்டம் சாந்திநகர் 28வது தெருவை சேர்ந்தவர் லெனின்(54). இவர் திருநெல்வேலி மாநகராட்சியில் உதவி இன்ஜினியராக 1997ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி முதல் பணியாற்றி வருகிறார்.


இவரது மனைவி சாந்தகுமாரி. இவர் திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரியில் 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இருவரும் அரசு ஊழியர்கள் என்ற வரையறைக்குள் வருகின்றனர். இவர்களுக்கு பாபின் என்ற மகனும், பாபிலா பிளஸ்சி என்ற மகளும் உள்ளனர்.



இவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா விசாரணை நடத்தியதில் லெனின் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர் என்பது உறுதியானது.


அவர்களது சொத்து மதிப்பு 2018ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியில் ரூ.73 லட்சத்து 4 ஆயிரத்து 579 ஆக இருந்தது. 6 ஆண்டு கழித்து 2024ம் ஆண்டு ஜூன் 30ம் தேதியில் அவர்களது சொத்து மதிப்பு ரூ.5 கோடியே 74 லட்சத்து 95 ஆயிரத்து 83 ஆக உயர்ந்தது.


6 ஆண்டுகளில் அவர்களது வருமானம் ரூ.2 கோடியே 41 லட்சத்து 65 ஆயிரத்து 355-ஆக இருக்க வேண்டும். செலவு 98 லட்சத்து 96 ஆயிரத்து 440 ஆக இருந்தது.



இதன் அடிப்படையில் வருமானத்திற்கு அதிகமாக, ரூ.3 கோடியே 59 லட்சத்து 21 ஆயிரத்து 589 சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் மதிப்பிட்டு உள்ளனர். இதன்படி லெனின் மற்றும் சாந்தகுமாரி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement