'டெண்டர்' விடாமல் கட்டப்படும் சமையல் கூடங்கள்!

2

டபராவில் பில்டர் காபியை ஆற்றியபடியே, ''வாரிசை ஆர்ப்பாட்டமா அறிமுகம் பண்ணிட்டார் ஓய்...'' என, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா.

''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.

''துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம், தி.மு.க., - எம்.எல்.ஏ., மார்கண்டேயனின் மகன் அக் ஷய், டில்லியில் சட்டப்படிப்பு படிக்கறார்... இவரை, சில வருஷங்களுக்கு முன்னாடியே, சத்தமில்லாம தி.மு.க., மாணவர் அணியில சேர்த்துட்டார் ஓய்...

''சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் மதுரை வந்தப்ப, விமான நிலையத்துல அக் ஷய் ஆவேசமா கோஷம் போட்டார்... போலீசார் பதறியடிச்சு ஓடி வந்து, அவரை வாயை பொத்தி இழுத்துண்டு போய், எச்சரிக்கை பண்ணி அனுப்பி வச்சா ஓய்...

''சில மணி நேரத்துக்கு பிறகு, மகனை பத்திரிகையாளர்கள் முன்னாடி நிறுத்திய மார்கண்டேயன், 'திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதிக்கு எதிராகத் தான் என் மகன் கோஷம் போட்டார்'னு விளக்கம் தந்தார்...

''விளாத்திகுளம் தி.மு.க.,வினரோ, 'சினிமாவுல ஹீரோவை ஆர்ப்பாட்டமா அறிமுகப்படுத்தற மாதிரி, தன் மகனையும் முதல்வர் முன்னாடி கோஷம் போட வச்சு, அரசியல் வாரிசா மார்கண்டேயன் அறிமுகப்படுத்திட்டார்'னு சொல்றா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''அறிக்கையை கிடப்புல போட்டுட்டாங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...

''நீலகிரி மாவட்டத்தில், குன்னுார் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்கு டெண்டர் எடுத்த கான்ட்ராக்டர், சொந்த காரணங்களால பணிகளை நிறுத்திட்டு போயிட்டாரு... நாலு வருஷமா இந்த பணிகள் முடியாம கிடக்குது பா...

''சில மாசங்களுக்கு முன்னாடி, புதுசா திட்ட அறிக்கை தயார் பண்ணி அனுப்பும்படி, மத்திய அரசு உத்தரவு போட்டுச்சு... இதன்படி, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும் ஆய்வு நடத்தி, 92.4 கோடி ரூபாய்க்கு திட்ட அறிக்கை தயார் செஞ்சாங்க பா...

''இதை, சென்னையில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிற இன்ஜினியரிங் அலுவலகத்துக்கு அனுப்பினாங்க... அவங்க வழியா தான், அறிக்கை டில்லிக்கு போகணும் பா...

''ஆனா, அறிக்கையை நாலு மாசமா கிடப்புல போட்டு வச்சிருக்காங்க... 'அடுத்த பருவ மழைக்குள்ளயாவது இந்த சாலையை விரிவாக்கம் பண்ணிடுவாங்களா'ன்னு, நீலகிரி மக்கள் புலம்புறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''டெண்டர் விடாமலே, கட்டுமானப் பணி நடக்கு வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.

''எந்த துறையிலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.

''துாய்மை பணியாளர்களுக்கு மூணு வேளையும் உணவு வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் கொண்டு வந்தாருல்லா... சென்னையில் மாநகராட்சிக்கு சொந்தமான பல இடங்கள்ல, இதுக்கான சமையல் கூடங்கள் கட்டும் பணிகள் நடக்கு வே...

''இதுல, சென்னை மயிலாப்பூர், ராதாகிருஷ்ணன் சாலை, தேனாம்பேட்டை, கவிஞர் பாரதிதாசன் சாலையில், மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள்ல எந்த டெண்டரும் விடாம, சமையல் கூடங்களை கட்டுதாவ... ஒரு சமையல் கூடத்துக்கு தலா, 45 லட்சம் ரூபாய் ஒதுக்கியிருக்காவ வே...

''இந்த, 45 லட்சம் ரூபாய்ல, நல்ல கான்கிரீட் கூரை போட்டே சமையல் கூடங்களை கட்ட முடியும்... ஆனா, 'ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்' போட்டு கட்டுதாவ... 'இதுல நிறைய முறைகேடுகள் நடக்குது'ன்னு அந்த பகுதி மக்கள் சொல்லுதாவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.

அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.

Advertisement