டிரம்ப் மிரட்டலுக்கு இடையே துவங்கியது கனடா பார்லி., தேர்தல்

ஒட்டாவா: அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மிரட்டல், அச்சுறுத்தலுக்கு இடையே கனடா பார்லிமென்ட் தேர்தல் துவங்கியது.
வட அமெரிக்க நாடான கனடாவில் இந்தாண்டு அக்டோபரில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்கிடையே, மக்கள் செல்வாக்கு சரிந்ததால், பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோவுக்கு, ஆளும் லிபரல் கட்சியில் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார்.
கட்சியின் பெரும்பான்மையினர் ஆதரவுடன், கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் மார்க் கார்னி தேர்ந்தெடுக்கப்பட்டார். மார்க் கார்னி திடீரென பார்லிமென்டை கலைத்து, ஏப்., 28ல் தேர்தல் நடைபெறும் என கடந்த மார்ச் 24-ம் தேதியன்று அறிவித்தார்.
திட்டமிட்டபடி இன்று மாலை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு துவங்கியது. இத்தேர்தலில் முக்கிய கட்சிகளில் லிபரல் கட்சி, கன்சர்வேடிவ் கட்சி, புதிய ஜனநாயகக் கட்சி, பிளாக் கியூபெகோயிஸ் மற்றும் பசுமைக் கட்சி ஆகியவை களத்தில் உள்ளன. எனினும் லிபரல் கட்சியின் தற்போதைய பிரதமர் மார்க் கார்னிக்கும் , கன்சர்வேட்டிவ் கட்சியின் பைர்ரி பொலிவிரீக்கும் இடையே தான் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப், கனடா மீதுஅதிக வரிகளை விதிப்பதாகவும் ,கனடாவை, அமெரிக்காவின், 51வது மாகாணமாக சேர்க்கப் போவதாக கூறி வந்த நிலையில், டிரம்ப்பின் மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் இன்று தேர்தல் நடைபெற்றது.
தேர்தல் முடிவுகள் இன்று இரவு 10 மணிக்கு மேல் வெளியிடப்பட உள்ளதால் யார் வெற்றி பெறுவர் என்பது தெரிந்துவிடும்.
இத்தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் டான் வேலி ஈஸ்ட் தொகுதியில், கேரளா மாநிலத்தை சேர்ந்த 51 வயதான பெலண்ட் மேத்யூ போட்டியிடுகிறார். கனடா தேர்தலில் போட்டியிடும் மலையாளி வேட்பாளர் இவர் மட்டும் தான்.
