காஞ்சியில் அரசு பள்ளிகளில் அட்மிஷன் துவக்கம் தனியாருக்கு இணையாக விளம்பர பேனர் அமைப்பு

காஞ்சிபுரம்,
அரசு பள்ளிகளில், 2025 -- 26ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை மார்ச் 1ம் தேதி முதல் துவக்க வேண்டும் என, தொடக்க கல்வி துறை உத்தரவிட்டு இருந்தது. மேலும், வகுப்பறை செயல்பாடு, திறன்மிகு வகுப்பறை உள்ளிட்ட அரசு பள்ளியில் சிறப்பம்சங்கள் குறித்து, பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் என, ஐந்து ஒன்றியங்களில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை உள்ள, 369 அரசு தொடக்க பள்ளிகளில், தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வியில், 2025 - 26ம் கல்வி ஆண்டுக்கான, முதல் வகுப்பில், மாணவ - மாணவியர் சேர்க்கை கடந்த மார்ச் 1ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.

இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கியும், விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டும், மாணவர் சேர்க்கை குறித்து அந்தந்த தொடக்க பள்ளிக்கு வெளியே அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

மேலும், தனியார் பள்ளியைப்போன்று, விளம்பரம் செய்யும் வகையில், பிளக்ஸ் பேனரும் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஓரிக்கை ஆசிரியர் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு துவக்கப் பள்ளி சார்பில், பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

இதில், பள்ளியில் உள்ள வகுப்பறை செயல்பாடு, திறன்மிகு வகுப்பறை, பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சி, உணவு திருவிழா, மாணவர்களுக்கான களப்பயணம், ஆண்டு விழா கொண்டாட்டம், விளையாட்டு போட்டிகள் குறித்து புகைப்படங்களுடன், தமிழ் மற்றும் ஆங்கில வழியில் 2025 - 2026ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என, குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement