நான்கு வழிச்சாலையில் 262 மரங்கள் மறு நடவு

1

அன்னுார், ;அவிநாசி-மேட்டுப்பாளையம் இடையே உள்ள இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்த 238 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் 13 கி.மீ., கோவை மாவட்டத்தில் 25 கி.மீ., என 38 கி.மீ., தூரத்திற்கு நான்கு வழி சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக மூன்று இடங்களில் நிலம் கையகப்படுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் சாலை அகலப்படுத்தும் போது இடையூறாக 1604 மரங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டது. இதில் 1342 மரங்கள் வெட்டி அகற்ற வேண்டும். மற்ற மரங்களின் கிளைகளை மட்டும் வெட்டினால் போதுமானது என கண்டறியப்பட்டது. பசுமை குழு ஆய்வு செய்து, 262 மரங்களை மறு நடவு செய்ய முடியும் என அதிகாரிகளுக்கு தெரிவித்தது. நேற்று நெடுஞ்சாலைத்துறை மற்றும் 'கிரீன் கேர்' அமைப்பு சார்பில், மறு நடவு செய்யும் பணி கஞ்சப்பள்ளி பிரிவில் துவங்கியது. முதல் நாளான நேற்று ஐந்து மரங்கள் மறு நடவு செய்யப்பட்டன.

இதுகுறித்து 'கிரீன் கேர்' அமைப்பின் நிறுவனர் சையது கூறுகையில் பூவரசு, மந்தாரை, வேம்பு, புங்கன், ஆயன், அரசு உள்ளிட்ட மரங்கள் மறு நடவு செய்யப்பட உள்ளன. மரம் ஆரோக்கியமாக உள்ளதாக என்றும், மறு நடவு செய்யும் இடத்தையும் ஆய்வு செய்கிறோம். கிளைகளை வெட்டி, மரத்தின் எடையை குறைத்து, வெட்டப்பட்ட பகுதியில் சாணம் மற்றும் சாக்கு வைத்து கட்டுகிறோம்.

கிரீன் கேர் அமைப்பு சார்பில் இதுவரை தமிழகம் குஜராத் கர்நாடகா மகாராஷ்டிராவில் 3000 மரங்களை கடந்த 12 ஆண்டுகளில் மறு நடவு செய்துள்ளோம், என்றார்.

மறு நடவு பணியில் மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ஆனந்தகுமார், உதவி பொறியாளர் சுகுமாரன் மற்றும் பசுமை ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

Advertisement