லாரி டிரைவர்களுக்கு ஆங்கிலம் பேச்சுத் திறமை வேண்டும்: அதிபர் டிரம்ப் புதிய உத்தரவு

11

வாஷிங்டன்: "அமெரிக்காவில் அனைத்து லாரி டிரைவர்களுக்கும் ஆங்கில பேச்சு புலமை கட்டாயம்" என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய டிரைவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.


அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அவரது உத்தரவுக்கு ஆதரவும் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. தற்போது அவர், "அமெரிக்காவில் உள்ள லாரி டிரைவர்கள அனைவரும் ஆங்கில புலமை பெற்று இருக்க வேண்டும்"என்ற உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இந்த உத்தரவு விமர்சனங்களை கிளப்பி உள்ளது.

இது குறித்து உத்தரவில் கூறி இருப்பதாவது:

* டிரைவர்களுக்கு ஆங்கிலத்தில் புலமை என்பது ஒரு சமரசம் செய்ய முடியாத பாதுகாப்புத் தேவையாக இருக்க வேண்டும். அவர்கள் சாலையில் உள்ள போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான எச்சரிக்கை குறிப்புகளை படித்துப் புரிந்து கொள்ள முடியும்.

* எல்லை ரோந்து பணி அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் எளிதாக பேச முடியும்.

* இது பொது அறிவு. புதிய போக்குவரத்து நிர்வாக சட்டத்தின் படி, அமெரிக்க லாரி டிரைவர்கள் ஆங்கிலத்தில் முறையாக தேர்ச்சி பெற்றிருப்பதை உறுதி செய்ய முடியும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய லாரி டிரைவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று சீக்கிய கூட்டணி கட்சிகள் தெரிவித்துள்ளது.


இது குறித்து சீக்கியர் சமூகத்தினர் கூறியதாவது: டிரைவர்களுக்கான
அதிக தேவையை பூர்த்தி செய்வதிலும், அமெரிக்க நுகர்வோர் மற்றும் பொருளாதாரத்தில் டிரைவர்கள் பற்றாக்குறையை குறைப்பதிலும் எங்கள் சமூகம் முக்கிய பங்கு வகித்துள்ளது; 2016ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை காலகட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டிரைவர்களாக பணியில் இணைந்துள்ளனர்.


இந்த உத்தரவு அமெரிக்காவில் லாரி துறையில் கணிசமான இருப்பைக் கொண்ட சீக்கிய சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த வழி வகுக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement