சிவகாசி மாநகராட்சியில் இணையும் 9 ஊராட்சிகள் பாதியில் நிற்கும் பணிகள், கவுன்சிலர்கள் மோதல்
சிவகாசி: சிவகாசி மாநகராட்சியின் 4-வது கமிஷனராக பொறுப்பேற்று உள்ள சரவணன் முன் 9 ஊராட்சிகளை இணைத்தல், முடிக்கப்படாமல் பாதியில் நிற்கும் திட்டப் பணிகள், கவுன்சிலர்களுக்கு இடையேயான மோதல் என அடுத்தடுத்த சவால்கள் காத்திருக்கின்றது.
சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகள் மற்றும் ஆனையூர், பள்ளப்பட்டி, செங்கமலநாச்சியார்புரம், நாரணாபுரம் உட்பட 9 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஊராட்சிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியில் இருந்ததால், முதற்கட்டமாக சிவகாசி, திருத்தங்கல் நகராட்சி இணைக்கப்பட்டு 2021ல் மாநகராட்சியாக செயல்பாட்டிற்கு வந்தது.
சிவகாசி மாநகராட்சி கமிஷனராக பொறுப்பு வகித்து வந்த கிருஷ்ணமூர்த்தி, திருநெல்வேலி மாநகராட்சி உதவி கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செங்கல்பட்டு மண்டல இணை இயக்குநர் சரவணன் சிவகாசி மாநகராட்சியின் 4 வது கமிஷனராக பொறுப்பேற்று உள்ளார். புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆணையர் முன் பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன.
மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட 9 ஊராட்சிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் ஜன. 5 ம் தேதி உடன் நிறைவடைந்ததை அடுத்து ஊராட்சிகள் மாநகராட்சி உடன் விரைவில் இணைக்கப்பட உள்ளது. ஏற்கனவே மாநகராட்சியில் வார்டு எல்லை பிரச்னை உள்ள நிலையில், ஊராட்சிகளை இணைத்து வார்டு மறுவரையறை செய்தல், கிராமப் பகுதிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துதல் முக்கிய சவாலாக இருக்கும்.
முடிக்கப்படாமல் பாதியில் நிற்கும் புதிய மாநகராட்சி அலுவலக கட்டுமான பணி, வியாபாரிகள் ஆர்வம் காட்டாததால் பங்களிப்பு நிதி திட்டத்தில் ரூ.5 கோடியில் வணிக வளாகம் கட்டும் பணி கிடப்பில் உள்ளது, கட்டி முடிக்கப்பட்ட வணிக வளாக கடைகள் ஒப்பந்தம் 4 முறைக்கு மேல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதால் மாநகராட்சிக்கு வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.
தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்கு வராதது, ரோடு, கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால் பணிகளை முழுமையாக மேற்கொள்ளாதது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மாநகராட்சி கவுன்சில் கூட்டங்களில் கவுன்சிலர்கள் அதிகாரிகள் மீது ஊழல் புகார் தெரிவிப்பது, கவுன்சிலர்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்து மோதிக்கொள்வது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி நிர்வாகத்தில் உள்ள இடர்பாடுகளை களைந்து வளர்ச்சி திட்ட பணிகளில் வேகமெடுக்க வைப்பதுடன், கூட்டத்தில் கவுன்சிலர்கள் எழுப்பும் பிரச்னை பெரும் தலைவலியாக இருக்கும்.
ஏற்கனவே மதுரை மாநகராட்சியில் உதவி கமிஷனராக பணிபுரிந்த அனுபவம் இருப்பதால், கமிஷனர் சரவணன் இப் பிரச்னைகளை சமாளித்து நிர்வாகத்தை சமூகமாக கொண்டு செல்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும்
-
லண்டனில் பாக். தூதரக அலுவலகம் மீது தாக்குதல்: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது
-
அமெரிக்க போர் விமானம் செங்கடலில் விழுந்து விபத்து: கடற்படை தகவல்
-
ஈரான் துறைமுக வெடி விபத்து பலி 65 ஆக உயர்வு; விபத்துக்கான காரணத்தில் மர்மம்!
-
மனைவியை கொலை செய்து பரோல் கைதி தற்கொலை
-
கிராம தலைவர் குத்திக்கொலை ஆர்.எஸ்.மங்கலத்தில் பரபரப்பு
-
செவிலியரான துாய்மை பணியாளர் குடந்தை ஜி.ஹெச்.,சில் அவலம்