மனைவியை கொலை செய்து பரோல் கைதி தற்கொலை

தர்மபுரி : தர்மபுரி டவுன், மதிகோன்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ்குமார், 32. இவர் மனைவி மகாலட்சுமி, 28. தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர். 2019ல் நடந்த கொலை வழக்கில் ரமேஷ்குமாருக்கு, தர்மபுரி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மனைவி, குழந்தைகளை காண, ரமேஷ்குமார் பரோலில் வந்தார். இரு நாட்களாக மனைவியுடன், உறவினர் வீடுகளுக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம், தர்மபுரி அடுத்த, குண்டலப்பட்டியிலுள்ள லாட்ஜில் இருவரும் அறை எடுத்து தங்கினர்.

நேற்று காலை, லாட்ஜிற்கு பதற்றத்துடன் வந்த ரமேஷ்குமாரின் பெற்றோர், ஜன்னல் வழியாக அறையை பார்த்தபோது, ரமேஷ்குமார் துாக்கில் தொங்கிய நிலையிலும், மகாலட்சுமி கட்டிலில் சடலமாகவும் கிடந்துள்ளனர்.

மதிகோன்பாளையம் போலீசார் கதவை உடைத்து பார்த்த போது, ரமேஷ்குமார் இறந்த நிலையில், மகாலட்சுமி நெஞ்சில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். ரமேஷ்குமார், மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு, தான் துாக்கிட்டு தற்கொலை கொண்டதாக, ரமேஷ்குமாரின் தந்தை சக்கரவர்த்தி, போலீசாரிடம் கூறியுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement