ரேஷன் கடைகளில் கோதுமை கிடைக்கவில்லை

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் உள்ள ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. திருவாடானை தாலுகாவில் 85 ரேஷன் கடைகளும், 39,400 ரேஷன் கார்டுதாரர்களும் உள்ளனர். கார்டுதாரர்களுக்கு அரிசி, பச்சரிசி, கோதுமை, இலவசமாகவும், பருப்பு, பாமாயில் குறைந்த விலையிலும் வழங்கப்படுகிறது. இரு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ரேஷன் கார்டுக்கு 5 கிலோ கோதுமை வழங்கப்பட்டது.

தற்போது அரை கிலோ கூட கிடைக்கவில்லை. கோதுமையில் ஊட்டச்சத்து அதிகமாக இருப்பதால் அனைவராலும் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். குறிப்பாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கோதுமை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

மக்கள் கூறுகையில், கடைகளில் அதிக விலையாக இருப்பதால் ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு வாங்கினோம். தற்போது கோதுமை கிடைக்காததால் சிரமமாக உள்ளது என்றனர். திருவாடானை சிவில் சப்ளை அலுவலர்கள் கூறுகையில், கோதுமை ஒதுக்கீடு மிகவும் குறைவாக உள்ளது.

ஆகவே ரேஷன் கார்டுதாரர்களுக்கு முழுமையாக சப்ளை செய்ய முடியவில்லை. கூடுதலாக ஒதுக்கீடு செய்யும் பட்சத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கோதுமை வழங்கப்படும் என்றனர்.

Advertisement