ராமநாதபுரத்தில் ஆறாக ஓடுகிறது பாதாளசாக்கடை கவுன்சிலர்கள் குமுறல்

ராமநாதபுரம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கத்தில் மாதாந்திர சாதாரண கூட்டம் நடந்தது. தலைவர் கார்மேகம் தலைமை வகித்தார். கமிஷனர் அஜிதா பர்வின் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
குமார் (பா.ஜ.,): இளங்கோ அடிகள் தெருவில் பேவர் பிளாக் தளம் அமைக்கும் பணி சரியாக மேற்கொள்ளவில்லை.
மழைநீர் தேங்குகிறது அதை சரிசெய்த பிறகு பில் கொடுக்க வேண்டும். வரி விதிப்பு தொடர்பாக ஆன்-லைனில் விண்ணப்பிக்க பாஸ்வேர்டு எதுவும் உள்ளதா. இதில் முறைகேடு நடப்பதாக கூறுகின்றனர். அதையும் அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும்.
தலைவர்: வரிவிதிப்பு முறை முழுமையாக ஆன்-லைனில் நடக்கிறது. முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை. அந்த மாதிரி இருந்தால் பாதிக்கப்பட்டவர் புகார் தந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்திரா மேரி (அ.தி.மு.க.,): எனது 27 வது வார்டில் பாதாள சாக்கடை சரிவர பம்பிங் செய்யப்படாமல் ரோட்டில் ஓடுவதால் துர்நாற்றத்தால் மக்கள் சிரமப்படுகின்றனர். நிரந்த தீர்வு காண வேண்டும்.
தலைவர்: உங்க ஏரியா மட்டுமில்லை. பேராவூருணி ஆலமரம் அருகே குழாய் சேதம் காரணமாக 6 பம்பிங் ஸ்டேஷன்களும் செயல்படவில்லை. சரிசெய்யும் பணி நடக்கிறது. ஒரிரு நாளில் சரியாகிவிடும்.
நாகராஜன் (தி.மு.க.,): குப்பை சரியாக அள்ளுவது இல்லை. போன் செய்து சொன்ன பிறகு தான் அள்ளுகின்றனர். மேலும் கேணிக்கரை ரோட்டில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
தலைவர்: குப்பை அள்ளவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ராஜாராம் பாண்டியன் (காங்.,): குப்பை, சுகாதாரக்கேடு குறித்து புகார் தெரிவிக்கும் வகையில் நகர்நல அலுவலர் வாட்ஸ்ஆப் குரூப் வைத்துள்ளார். அதிலும் புகார் தெரிவிக்கிறோம்.
கவுன்சிலர் என்ற முறையில் பொறியாளருக்கு 10 முறை போன் செய்தாலும் அவர் எடுப்பது இல்லை.
பதவிக்கு வந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் பாதாள சாக்கடை பிரச்னைக்கு தீர்வு காண முடியவில்லை. மக்கள் கேள்விக்கு நாங்கள் தான் பதிலளிக்க வேண்டும்.
ஈசா பள்ளிவாசல், அலங்கச்சேரி ரோடு பள்ளத்தை எனது சொந்த செலவில் மேடுபடுத்தியுள்ளேன். மழை பெய்தால் பிரச்னை வருகிறது. புதிய ரோடு அமைக்க வேண்டும்.
தலைவர்: கவுன்சிலர்களுக்கு தான் வார்டில் உள்ள பிரச்னைகள் தெரியும். அவர்களுக்கு அதிகாரிகள் கண்டிப்பாக மரியாதை தர வேண்டும். ஈசா பள்ளி வாசல் பகுதியில் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மணிகண்டன் (காங்.,): ராமநாதபுரம் புதுத்தெருவில் ஆரம்ப சுகாதார நிலையம் புதிய கட்டடம் கட்டும் பணி முடிந்து விட்டதா. எப்போது பயன்பாட்டிற்கு வரும்.
தலைவர்: பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இது குறித்து சுகாதாரத்துறையினரிடம் தெரிவித்து விரைவில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டடத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இக்கூட்டத்தில் ரூ.45 லட்சத்தில் புதிய பஸ் ஸ்டாண்டில் நுழைவு வாயில் அமைக்க ஒப்பந்தபுள்ளிக் கோரியுள்ளதற்கு அனுமதி, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் பாதாள சாக்கடை பராமரிப்பு பணியை மேற்கொள்ள ரூ.28 லட்சத்து 50ஆயிரம் திட்டமதிப்பீடு உள்ளிட்ட 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும்
-
லண்டனில் பாக். தூதரக அலுவலகம் மீது தாக்குதல்: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது
-
அமெரிக்க போர் விமானம் செங்கடலில் விழுந்து விபத்து: கடற்படை தகவல்
-
ஈரான் துறைமுக வெடி விபத்து பலி 65 ஆக உயர்வு; விபத்துக்கான காரணத்தில் மர்மம்!
-
மனைவியை கொலை செய்து பரோல் கைதி தற்கொலை
-
கிராம தலைவர் குத்திக்கொலை ஆர்.எஸ்.மங்கலத்தில் பரபரப்பு
-
செவிலியரான துாய்மை பணியாளர் குடந்தை ஜி.ஹெச்.,சில் அவலம்