போலீசாருக்கு வார விடுமுறை கட்டாயம் உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: அரசாணைப்படி போலீசாருக்கு வார விடுமுறையை கட்டாயமாக்க தாக்கலான வழக்கில், 'இரண்டாம் நிலை காவலர் முதல் ஏட்டு பதவிவரை உள்ள அனைத்து போலீசாருக்கும் கட்டாய வார விடுமுறை அளிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவை முறையாக செயல்படுத்துவதை டி.ஜி.பி.,உறுதி செய்ய வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை ஆஸ்டின்பட்டி போலீஸ் ஏட்டு செந்தில்குமார் தாக்கல் செய்த மனு:

போலீசார் பணியின்போது பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். அவர்கள் வாரத்தில் 7 நாட்களும் தினமும் 24 மணி நேரம் பணி செய்ய வேண்டியுள்ளது. இதனால் அவர்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியவில்லை. உடல், மன ரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.

போலீசாருக்கு வார விடுமுறை அளிக்க தமிழக அரசு 2021 ல் அரசாணை வெளியிட்டது. அதை தற்போதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. எனக்கு பலமுறை வார விடுமுறை மறுக்கப்பட்டது. இதுபோன்ற பிரச்னையை போலீசாரில் பலர் எதிர்கொள்கின்றனர். உரிமைகள் தொடர்பாக உயரதிகாரிகளிடம் கேட்டால் பழிவாங்கப்படுவோம். அரசாணையை முறையாக அமல்படுத்தி போலீசாருக்கு வாரவிடுமுறை அளிப்பதை கட்டாயமாக்க வேண்டும். எனக்கு வார விடுமுறை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி டி.ஜி.பி.,க்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி பட்டு தேவானந்த்:

போலீசார் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு, இரண்டாம் நிலை காவலர் முதல் ஏட்டு வரையிலான போலீசாருக்கு வார விடுமுறை வழங்குவதாக தமிழக முதல்வர் 2021 செப்.,13 ல் சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டார். இதனடிப்படையில்,'ஏட்டு பதவிவரை உள்ள அனைத்து போலீசாருக்கும் கட்டாய வார விடுமுறை அளிக்க வேண்டும். பொது நலனுக்காக, எந்தவொரு ஏட்டு அல்லது போலீசாருக்கு ஒரு நாள் வார விடுப்பு வழங்காவிடில், அதை ஈடு செய்யும் வகையில் அவருக்கு வேறொரு நாளில் விடுமுறை வழங்கப்படும்,' என தமிழக உள்துறை 2021 நவ.3 ல் அரசாணை பிறப்பித்தது.

இது ஒரு தனிநபரின் உடல்நலம் மற்றும் வாழ்க்கை தொடர்பானது மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான போலீசாரின் உடல்நலம் மற்றும் வாழ்க்கைத் தரம் தொடர்புடையது.

அரசின் உத்தரவிற்கு மாறாக பலமுறை வார விடுமுறை மறுக்கப்படுகிறது என மனுதாரர் தரப்பு கூறுகிறது. தமிழகத்தில் போலீசார் தங்கள் குறைகளை மாநில அரசிடமோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமோ தெரிவிக்க எந்த சங்கமும் இல்லை. அண்டை மாநிலங்களில் போலீசாருக்கு சங்கம் உள்ளது ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை.

இச்சூழ்நிலையில் வார விடுமுறையின் பலனை நீட்டிக்கக்கோரி ஒவ்வொரு போலீசாரும் தனித்தனி ரிட் மனுவை தாக்கல் செய்ய இந்நீதிமன்றத்தை அணுக வேண்டும் என அரசு தரப்பு எதிர்பார்க்க முடியாது.

நீலகிரி மாவட்டம் உதகை போக்குவரத்து போலீசாக பணிபுரிபவர் கலையரசன். அவருக்கு வார விடுப்பு வழங்காததற்காக 'வாட்ஸ்ஆப்'பில் ஒரு பதிவை மனைவி வெளியிட்டார். காவல்துறையை அவதுாறு செய்யும் வகையில் பதிவிட்டதாகக்கூறி கலையசரனுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. வார விடுமுறை அளிக்க வேண்டும் என்ற அரசாணையை டி.ஜி.பி., மற்றும் அவரது சக அதிகாரிகள் எவ்வாறு செயல்படுத்துகிறார்கள், முதல்வரின் அறிவிப்பை அவர்கள் எவ்வாறு மதிக்கிறார்கள் என்பதை இந்நிகழ்வு நிரூபிக்கிறது.

போலீசாரின் உடல்நிலையை கவனித்துக் கொள்ள, மன அழுத்தத்திலிருந்து மீள, குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிட உதவியாக இருக்கும் நோக்கில் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார். முதல்வரின் முடிவு பாராட்டத்தக்கது. முதல்வரின் அறிவிப்பு அடிப்படையில் வெளியான அரசின் உத்தரவை முறையாக செயல்படுத்தவில்லை.

மாநில அரசின் கொள்கை முடிவு பலனை போலீசாரால் அனுபவிக்க முடியவில்லை. மாநில அரசு பிறப்பித்த உத்தரவுகளுக்கு எதிராக எந்த நிவாரணத்தையும் மனுதாரர் கோரவில்லை. அவரது கோரிக்கை நியாயமானது.

ஏட்டு பதவி வரை உள்ள அனைத்து போலீசாருக்கும் கட்டாய வார விடுமுறை அளிக்க வேண்டும் என்ற உத்தரவை முறையாக செயல்படுத்துவதை டி.ஜி.பி.,உறுதி செய்ய வேண்டும்.

இந்த உத்தரவை எதிர்காலத்தில் மீறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு உத்தரவிட்டார்.

Advertisement