தேங்கும் கழிவுநீரால் தொடரும் தொற்று பரவல் அம்பாத்துறை ஊராட்சியில் நீடிக்கும் அவலம்

சின்னாளபட்டி: அம்பாத்துறை ஊராட்சியில் குடிநீர் வழங்கலில் குளறுபடி, திடக்கழிவு மேலாண்மையில் அலட்சியம், அள்ளப்படாத சாக்கடை, குண்டும் குழியுமான ரோடு பிரச்னைகளால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

ஆத்துார் ஒன்றியம் அம்பாத்துறை ஊராட்சியில் மேலக்கோட்டை, அம்பாத்துறை, முருகன்பட்டி, பெருமாள்கோவில்பட்டி உட்பட 5க்கு மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான பகுதிகளில் தெருவிளக்கு, சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் இல்லை.

திடக்கழிவு மேலாண்மை திட்டம் இப்பகுதியில் செயல்பாடின்றி முடங்கி கிடக்கிறது. கிராமங்கள் தோறும் கண்ட இடங்களில் கழிவுகள் குவிக்கப்பட்டு உள்ளன. சாக்கடையில் கழிவுகள் அள்ளப்படாத சூழலில் குப்பை மேவி உள்ளன.

மழைநீருடன் கழிவுநீர் கலந்து குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கும் அவலம் பரவலாக உள்ளது. ஈ, வண்டு, பூச்சி, கொசுத்தொல்லை நோய் பாதிப்பு என சுகாதாரகேடான சூழலில் இப்பகுதியினர் சிக்கித் தவிக்கின்றனர்.

திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பழமை வாய்ந்த போலய கவுண்டன் கண்மாயின் வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பாளர்களால் தடைபட்டுள்ளது.

போதிய நீர் வரப்பின்றி இப்பகுதி நிலத்தடி நீராதாரம் சில ஆண்டுகளாக வெகுவாக பாதித்துள்ளது.

சில கிராமங்களில் போதிய பாதுகாக்கப்பட்ட குடிநீர், தெருவிளக்கு, போதிய சாக்கடை இல்லாமல் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். மழைக்காலங்களில் தேங்கிய மழை நீரால் சுகாதாரக்கேடு மட்டுமின்றி அனைத்து தெருக்களிலும் ரோடுகள் சகதிக்காடாக மாறுகிறது.

இரவு மட்டுமின்றி பகல் நேரங்களிலும் விஷப் பூச்சிகளின் நடமாட்டம் தாராளமாக உள்ளது. அதிகாரிகள் அலட்சியத்தால், அடிப்படை வசதிகளின்றி அல்லல்படுகின்றனர்.இப்பிரச்னைக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையை மக்கள் எதிர்நோக்கி உள்ளனர்.

--போதிய குடிநீர் இல்லை



ராம்குமார், விவசாயி, பெருமாள்கோயில்பட்டி: ஜல்ஜீவன் மிஷன் திட்டத்திற்காக அமைக்கப்பட்ட தண்ணீர் குழாய்கள், ஊராட்சி முழுவதும் காட்சி பொருளாக பயன்பாடின்றி கிடக்கின்றன.

சில இடங்களில் மட்டுமே வீட்டு குடிநீர் இணைப்பு பெயரளவில் வழங்கப்பட்டு உள்ளது. பெருமாள்கோயில்பட்டியில் இதற்கான மேல்நிலை தொட்டி மூலம் உப்புத்தண்ணீர் வழங்கப்படுகிறது.

2 இடங்களில் காவிரி நீர், பிளாஸ்டிக் தொட்டி அமைத்து வினியோகம் நடக்கிறது. போதுமானதாக இல்லாததால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வாரம் ஒரு முறை மட்டுமே கிடைக்கிறது.

தெரு குழாய்களை சுற்றிலும் கழிவுநீர் சூழ்ந்து பாசி படர்ந்த நிலையில் நோய்க்கிருமிகளின் புகலிடமாக மாறியுள்ளது.

பலர் தொற்று பாதிப்புக்குள்ளான போதும் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. சிலுவைத் திண்ணை ரோட்டில் சாக்கடையில் மண்மேவி கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது.

துார்ந்த நீராதாரம்



சித்திரவேலு, தனியார் நிறுவன ஊழியர், முருகன்பட்டி: போலய கவுண்டன் குளம், தொப்பம்பட்டி நீர்த்தேக்கத்திலிருந்து வரும் வழித்தடத்தில் தனியார் ஆக்கிரமிப்புகளால் வரத்து நீர் தடைபட்டுள்ளது.

வாய்க்கால் சீரமைப்பு மேம்பாட்டில் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை. பல ஆண்டுகளாக புகார் செய்தும் ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க நடவடிக்கை இல்லை.

மிகப்பெரிய கண்மாய் தற்போது குட்டையாக மாறி உள்ளது. இதனால் இப்பகுதி நிலத்தடி நீர் ஆதாரம் பாதித்துள்ளது. சாக்கடை கால்வாய் சரிவர பராமரிப்பில் இன்றி மண் மேவியுள்ளது. முருகன்பட்டி துவக்கப்பள்ளி முன் மழை நீர் தேங்கி உள்ளதால் மாணவர்கள் தண்ணீருக்குள் இறங்கி சீருடைகள் நனைந்த நிலையில் பள்ளி செல்லும் அவலம் தொடர்கிறது.

நீடிக்கும் அவதி



கார்த்திகேயன், பா.ஜ., ஆத்தூர் வடக்கு ஒன்றிய பொருளாளர், முருகன்பட்டி: முருகன் பட்டி -பெருமாள்கோயில்பட்டி ரோடு சேதமடைந்துள்ளது.

குறந்தபட்சம் மெட்டல் ரோடு அமைக்க உள்ளாட்சி நிர்வாகம் முன்வரவில்லை.

மேல்நிலைத் தொட்டி செல்லும் ரோடு வடக்கு வீதி பகுதிகளில் போதிய ரோடு வசதி இன்றி குழிகள் விரவி உள்ளன.

மழை நீர் தேங்கியுள்ளதால் வாகனங்களில் செல்வோர் மட்டுமின்றி பாதசாரிகளும் அவதிக்குள்ளாகின்றனர்.

குடிநீர் வழங்கல் திட்டத்திற்காக அமைக்கப்பட்ட இரும்பு தெருக்குழாய்கள் சேதமடைந்து ரோட்டோரங்களில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தி வருகின்றன.

அசுத்த நீர் தேங்கிய பகுதியில் தாழ்வான நிலையில் தெருக்குழாய்கள் அமைத்துள்ளனர். சாக்கடை முழுவதும் மண் மேவியுள்ளது.

அசுத்த நீர் தேங்கி கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது.

பல தெருக்களில் போதிய தெருவிளக்கு இல்லை. தெருவிளக்கு இல்லாமல் விஷப் பூச்சிகளின் தாக்குதலால் பாதிக்கும் அவலநிலை தொடர்கிறது.-

Advertisement