ஆண் குழந்தைக்காக கொழுந்தியாளை பலாத்காரம் செய்தவர் மீது போக்சோ

கடமலைக்குண்டு: மயிலாடும்பாறை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 30 வயது வாலிபருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது. இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

வாலிபரின் மனைவிக்கு 16 வயதில் தங்கையும், தம்பியும் உள்ளனர். இந்நிலையில் மனைவியின் 16 வயது தங்கை மீது ஆசை கொண்டவர், அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று, தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளதாகவும் ஆண் குழந்தை வேண்டும் என்பதால் மனைவியின் தங்கையை திருமணம் செய்து வைக்க வற்புறுத்தி உள்ளார்.

மனைவியின் பெற்றோர்கள் அவரை திட்டி அனுப்பினர்.

இந்நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்ட மனைவியின் தங்கையை வாலிபர் சிகிச்சைக்காக தேனியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அங்கிருந்து மதுரைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு தங்கும் விடுதியில் அறை எடுத்து சிறுமியுடன் தங்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இரு நாட்களுக்குப் பின் சிறுமியை மீண்டும் பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இது குறித்து யாரிடமும் தெரிவிக்க கூடாது என்று சிறுமியை கண்டித்துள்ளார். நடந்த நிகழ்வுகள் குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், வாலிபர் மீது மயிலாடும்பாறை போலீசில் புகார் கொடுத்தனர். மனைவியின் தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து தலைமறைவாக உள்ளவரை போக்சோவில் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Advertisement