சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

கடலுார்; கடலுார் தேவனாம்பட்டினத்தில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்க அமைதி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கடலுார் தேவனாம்பட்டினத்தில் மாநகராட்சி சார்பில், 40 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை சுத்திரிப்பு மையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த 26ம் தேதி, சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ள இடத்தில் கம்பிவேலி அமைக்க அதிகாரிகள் சென்ற போது, மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். கம்பி வேலி அமைக்க மட்டும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டதன் பேரில், மக்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில், நேற்று காலை கம்பி வேலியை அகற்றிய நபர்கள் மீது நடவடிக்கை கோரி மாநகராட்சி பொறியாளர் கோவிந்தராஜ், தேவனாம்பட்டினம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

இதையடுத்து மாநகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் அனு தலைமையில் மாலை அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. கூட்டத்தில் மே 4ம் தேதி ஊரில் கோவில் கும்பாபிஷேகம் நடப்பதால் அதுவரை பணிகளை நிறுத்தி வைக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கமிஷனர் அனு, பாதாள சாக்கடை திட்டத்தால் பிரச்னையும் ஏற்படாது என விழிப்புணர்வு ஏற்படுத்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதுவரை பணிகளை தற்காலிகமாக நிறுத்தவும், போலீசில் அளித்த புகார் மீது நடவடிக்கையை நிறுத்தி வைக்கவும் உறுதி அளித்தார். இதையேற்று அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement