சேதமடைந்த சிறுபாலத்தில் வாகனங்கள் செல்வதில் சிரமம் அணைக்கரைப்பட்டி ஊராட்சி ஜெயம் நகரில் வசதி இன்றி மக்கள் தவிப்பு

போடி: போடி, அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஜெயம் நகரில் சேதமடைந்த சிறுபாலத்தில் வாகனங்கள் கரணம் தப்பினால் மரணம் என்ற ரீதியில் பயணிக்கின்றன. ரோடு, குடிநீர், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

போடி ஒன்றியம், அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது ஜெயம் நகர். 800 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். போடி நகராட்சி 10 வது வார்டு அருகே ஜெயம் நகர் மேற்கு மந்தை தெரு அமைந்து உள்ளது.

இங்கு குடிநீர் வசதி இன்றி போர்வெல் நீரையே குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். வீட்டு வரி செலுத்த 3 கி.மீ. தூரம் உள்ள அணைக்கரைப்பட்டி ஊராட்சி அலுவலகத்திற்கும், ஓட்டு போட 4 கி.மீ., தூரம் உள்ள முந்தல் மலைக் கிராமத்திற்கு செல்ல வேண்டும்.இதனால் பலர் வீட்டு வரி செலுத்தாமல் உள்ளனர்.

ஊராட்சியில் நிலவும் பிரச்சனை குறித்து கிராம மக்கள் கூறியதாவது:

ரோடு வசதி இல்லை



சீதாலட்சுமி, அணைக்கரைப்பட்டி: ஜெயம் நகர் மேற்கு மந்தை தெருவில் பாதை இருந்தும் ரோடு வசதி இல்லை. மழைநீர் செல்ல வழி வசதி இல்லாததால் தெருக்கள் சேரும், சகதியுமாகி விடுகிறது.

அவசர காலங்களில் ஆட்டோ கூட வர மறுக்கின்றனர். தெருக்களில் மின்கம்பம் இருந்தும் விளக்கு வசதி இல்லை. இதனால் தெரு இருளில் மூழ்கியுள்ளதால் பெண்கள் வெளியே வர அச்சம் அடைந்து வருகின்றனர். அடிப்படை வசதிகள் செய்து தர ஊராட்சி நிர்வாகத்தில் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.

கட்டணம் வழங்கி குடிநீர் சேகரிப்பு



கிருஷ்ணமூர்த்தி, அணைக்கரைப்பட்டி: மேற்கு மந்தை தெருவில் குடிநீர் வசதி இல்லை. குடிநீருக்காக அருகே நகராட்சி பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று மாதம் ரூ.50 கொடுத்து குடிநீர் பிடித்து வருகின்றோம்.

வீடுகளில் உள்ள போர்வெல் நீரையே சில நேரங்களில் குடிநீராக பயன்படுத்த வேண்டியுள்ளது.

சாக்கடை வசதி இல்லாத வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வீடுகளுக்கு முன்பு குளம் போல தேங்கி உள்ளது. இதனால் மக்கள் சுகாதாரக்கேட்டில் தவிக்கின்றனர்.

அடிப்படை வசதியும், வீட்டு வரி செலுத்தவும், ஜெயம் நகரில் சாவடி ஏற்படுத்திட வேண்டும்.

சேதமடைந்த ஓடை பாலம்



முத்துச்செல்வி, அணைக்கரைப்பட்டி: சந்தன மாரியம்மன் கோயிலில் இருந்து ஜெயம் நகர் மேற்கு மந்தை தெருவிற்கு செல்லும் பாதையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு வஞ்சி ஓடை பாலம் கட்டப்பட்டது.

மழை, மண் அரிப்பால் பாலம் சேதம் அடைந்து உள்ளது. இதனால் டூவீலர் கூட செல்ல முடியாமல் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

அவசர காலங்களில் ஆட்டோ கூட வர முடியாத நிலையில் ஜெயம் நகர் மெயின் ரோட்டில் இருந்து சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது.

வஞ்சி ஓடையில் பிளாஸ்டிக், குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, அருகே குடியிருக்கும் மக்களுக்கு சுகாதாரகேடு ஏற்படுகிறது.

தேங்கிய குப்பையை அகற்றுவதோடு, பாலம், போர்வெல் தண்ணீர் தொட்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement