சந்தான வரம் அளிக்கும் கோபால கிருஷ்ணர்

கர்நாடகாவில் மற்ற கோவில்களுடன் ஒப்பிட்டால், கிருஷ்ணர் கோவில்களின் எண்ணிக்கை குறைவு தான். கடலோர மாவட்டத்தில் அபூர்வமான கிருஷ்ணர் கோவில் உள்ளது. சந்தான வரம் அளிக்கும் கோபால கிருஷ்ணர் குடிகொண்டுள்ளார். குழந்தையில்லா தம்பதி இங்கு வருகின்றனர்.

தட்சிணகன்னடா, பெல்தங்கடியில், பன்யாரி கிராமத்தின் அருகில் கோபால கிருஷ்ணர் கோவில் உள்ளது. உடுப்பியில் இருந்து தர்மஸ்தலாவுக்கு செல்லும் பக்தர்கள், பெல்தங்கடி அருகில் உள்ள கோபால கிருஷ்ணரை தரிசனம் செய்து செல்கின்றனர். கோவிலை தரிசித்து வேண்டினால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பிரசாதம்



திருமணமாகி பல ஆண்டுகளாக, குழந்தை இல்லாமல் மனம் நொந்துள்ள தம்பதியர், பெல்தங்கடி கோபால கிருஷ்ணரை தரிசனம் செய்து வேண்டுகின்றனர். கோவிலில் வழங்கப்படும் பால் பாயசம் அல்லது வெண்ணெய் பிரசாதம் பெறுகின்றனர்; பிரார்த்தனை செய்து பிள்ளை வரம் பெற்றவர்கள் ஏராளம்.

வேண்டுதல் நிறைவேறினால், பாலில் பாயாசம் தயாரித்து கோவிலில் அர்ப்பணிக்க வேண்டும். இங்குள்ள கிருஷ்ணருக்கு பால் பாயாசம் மிகவும் விருப்பமான நைவேத்தியமாகும். பக்தர்கள் வெறும் 100 ரூபாய் கொடுத்தால் போதும், அர்ச்சகர்களே பால் பாயாசம் தயாரித்து, நைவேத்தியம் செய்வர்.

'ரங்க பூஜை' என்ற சிறப்பு சேவையும் இங்குள்ளது. இரவு வேளையில் கிருஷ்ணரின் முன் வாழை இலைகளில் சோற்று உருண்டை வைத்து, அதன் நடுவில் தேங்காய் வைத்து விளக்கேற்றப்படும். மங்கள வாத்தியங்கள் இசைக்கப்படும். பக்தர்கள் விரும்பினால், இந்த சேவையை செய்யலாம்.

துலாபார சேவையும் இங்குள்ளது. குழந்தை பிறந்த பின், கோவிலுக்கு கொண்டு வந்து, குழந்தையின் எடைக்கு எடை விருப்பமான பொருட்களை காணிக்கையாக செலுத்தலாம்.

இங்கு துர்க்கை, கணபதி சன்னிதிகளும் உள்ளன. திருமண தடை உள்ளவர்கள், துர்க்கையை வேண்டி கொண்டால், நல்ல வாழ்க்கை துணை கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே ஆண்கள், பெண்கள் கோவிலுக்கு வந்து திருமண வரம் கேட்டு வேண்டுதல் வைப்பர்.

கோபால கிருஷ்ணர் கோவில், 600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக, ஆவணங்கள் கூறுகின்றன.

குழந்தை இல்லாத தம்பதி கோபால கிருஷ்ணரை வேண்டிய பின், குழந்தை பிறந்ததாம். இதேபோன்று மற்றவருக்கும், அருள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், கிருஷ்ணருக்கு கோவில் கட்டினாராம்.

கர்ப்ப கிரகத்தில் உள்ள சிலை மிகவும் அற்புதமானது. உயிரோட்டத்துடன் தென்படுகிறது. கோவில் மிகவும் சிதிலமடைந்திருந்தது. பக்தர்கள் 35 லட்சம் ரூபாய் செலவிட்டு சீரமைத்தனர்.

வலம்புரி சங்கு



வாரந்தோறும் சனிக்கிழமைகளில், மாலையில் கோபால கிருஷ்ணர் கோவிலில் பஜனை நடக்கிறது. இதில் ஜாதி, பேதமின்றி பக்தர்கள் பங்கேற்கின்றனர். பவுர்ணமி நாளன்று சத்ய நாராயணா பூஜைகள் நடக்கின்றன. ஆண்டுதோறும் ஸ்ரீ கிருஷ்ண லீலோத்சவம் என்ற பெயரில் திருவிழா நடக்கிறது. மிகவும் அபூர்வமான வலம்புரி சங்கு கோவிலில் உள்ளது.

கோவிலை சுற்றிலும் நுாற்றுக்கணக்கான மயில்கள் காணப்படுகின்றன. இவை நடனமாடுவதை பக்தர்கள் காணலாம். கோவில் கூரையில் நுாற்றுக்கணக்கான நீல நிற புறாக்கள் அடைக்கலம் பெற்றுள்ளன.

சமீபத்தில் ஒரு வெள்ளைப்புறாவும் இங்கு வந்துள்ளது. தினமும் அர்ச்சகரின் வருகைக்காக காத்திருக்கின்றன. அவர் வந்து, கோவிலை திறந்து, தானியங்களை போடுகிறார். அதை தின்ற பின் பறந்து செல்கின்றன; மாலையில் திரும்புகின்றன.

புறாக்களை தத்தெடுத்து, அவற்றுக்கு தீவனம் வழங்கும் பொறுப்பை ஏற்கலாம். புறாக்களுக்கு உணவிடுவது புண்ணியத்தை தரும் என, புராணங்கள் கூறுகின்றன. எனவே பக்தர்கள் புறாக்களுக்கு உணவு அளிக்கின்றனர்.


எப்படி செல்வது?

பெங்களூரில் இருந்து 348 கி.மீ., மங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து 5 கி.மீ., தொலைவில் கோபால கிருஷ்ணர் கோவில் அமைந்துள்ளது. அனைத்து நகரங்களில் இருந்தும், கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ் வசதியும் உள்ளது. விமானத்தில் வருவோர், மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து சாலை வழியாக செல்லலாம். கோவிலை பற்றி, கூடுதல் தகவல் வேண்டுவோர், 82422 31252, 89713 66902 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.தரிசன நேரம்: அதிகாலை 5:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை; மாலை 4:00 மணி முதல் இரவு 8:3-0 மணி வரை.



- நமது நிருபர் -

Advertisement